ஒரு விசாரணைக்காக, புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாக, கிள்ளான் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ தனது முகநூல் பதிவில் இன்று தெரிவித்தார்.
கடந்தாண்டு, நவம்பர் 25-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கருத்துக்களம் தொடர்பாக, நாளை காலை தன்னை போலிசார் விசாரிக்கவுள்ளதாக அவர் சொன்னார்.
சோஸ்மாவை இரத்து செய்வதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மலேசிய மனித உரிமைகள் குழு (சுவாராம்) ஏற்பாடு செய்த அந்நிகழ்ச்சியில் சார்லஸ் ஒரு பேச்சாளராகக் கலந்துகொண்டார் என கூறப்படுகிறது.
அந்நிகழ்ச்சியில், சார்லஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாக, சர்ச்சைக்குரிய மதப்போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் முன்பு அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 நபர்கள் கைது தொடர்பில், ஜாகிரைச் சம்பந்தப்படுத்தி அவதூறு பேசியதாக ஜாகிர், சார்லஸ் மீது குற்றம் சாட்டியிருந்தார்; ஆனால், சார்லஸின் வழக்கறிஞர்கள் அக்கருத்துக்கள் அவதூறானவை அல்ல என்று கூறினர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (b)-இன் கீழ், இதே கருத்துகளம் தொடர்பில், சுவாராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமியையும் புக்கிட் அமான் போலீசார் விசாரித்தனர்.