பிஏசியுடன் ஒத்துழைக்க ஜாஹித் தயாராக உள்ளார்

அரச மலேசியக் கடற்படையின் (தி.எல்.டி.எம்.) ஆறு சொத்துக்களை நிறைவு செய்யத் தவறியது குறித்து விசாரித்து வரும் பொதுக் கணக்குக் குழுவுக்கு (பிஏசி) முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவிருக்கும் சட்ட நடவடிக்கையில், பிஏசிக்கு தேவையான அனைத்து தகவலும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

“அதன் கட்டுமானத்தில் தாமதத்தை ஏற்படுத்திய எந்தவொரு தரப்பினரும் பிஏசிக்கு விளக்கம் அளிக்க பொறுபேற்க வேண்டும்.

“இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய பிஏசி-யை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன், அதன் விசாரணையின் வெளிப்படைத்தன்மை பகிரங்கப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்,” என்று நேற்று இரவு ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

தி.எல்.டி.எம்.-க்கு வழங்கப்பட வேண்டிய ஆறு இரண்டாம் தலைமுறை ரோந்து கப்பல்கள் தாமதமானது குறித்த விசாரணையை நடத்த, அஹ்மத் ஜாஹித்தை அழைக்கவுள்ளதாக நேற்று பி.ஏ.சி கூறியது.

கடலோரப் போர்க்கப்பல் (எல்.சி.எஸ்.) சுமார் RM9 பில்லியன் செலவில் கட்டப்பட்டது.

14-வது ஜி.இ.க்கு முன்னர், பாரிசான் நேஷனல் அரசாங்கமாக ஆனபோது, ​​அஹ்மத் ஜாஹித் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அப்துல் அஜீஸ் ஜாஃபர் மற்றும் அத்திட்டத்தின் முக்கிய ஒப்பந்தக்காரரான போவ்ஸ்தெட் நாவால் ஷிப்யார்ட் சென்.பெர். (Boustead Naval Shipyard Sdn Bhd) ஆகியோரும் அழைக்கப்படுவார்கள் என்று பிஏசி தலைவர் வோங் கா வோ கூறினார்.

“ஜனவரி 2021-ல் பேராக் லுமூட் நகரில் உள்ள எல்.சி.எஸ். கப்பல் கட்டும் தளத்தையும் பிஏசி பார்வையிடும்” என்று அவர் கூறினார்.