‘சமகால அடிமைத்தனத்திற்கு’ எதிராக சட்டமியற்றுவதன் மூலம், சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கௌரவிக்கவும்

1990-ல், அனைத்து புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாடு குறித்த தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை ஏற்றுக்கொண்ட ‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின’த்தின் 30-வது ஆண்டு நிறைவு இன்று.

அப்போதிருந்து, ஐ.நா. தனது தொடர்பு நிறுவனங்கள் மூலம், ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் 18-ம் நாள், 41 மில்லியனுக்கும் அதிகமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் உட்பட, சுமார் 272 மில்லியன் புலம்பெயர்ந்தோர் அளித்துவரும் பங்களிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் உலகிற்கு நினைவுறுத்தி வருகின்றது.

மலேசியாவின் பெண் தொழிலாளர் உரிமைகள் குழு, (பெர்சத்துவான் சஹாபாட் வனித்தா சிலாங்கூர் [பி.எஸ்.ட்பிள்யூ.எஸ்.]) புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்கை உணரும்படியும், இந்த ஆண்டு கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (எம்.சி.ஓ.) காரணமாக, அடிமைத்தனம் மற்றும் கட்டாய உழைப்பில் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்கும்படியும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

“குறிப்பாக, வேலைவாய்ப்புச் சட்டம் 1955 (EA) இல், புலம் பெயர்ந்த ஊழியர்களாக அங்கீகரிக்கப்படாத வீட்டுப் பணியாளர்கள்.

“இது உள்நாட்டு தொழிலாளர்கள் மற்றும் பணியிட வன்முறை, துன்புறுத்தல்களை நீக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) 189 மற்றும் 190 மாநாடுகளை நினைவுறுத்துகிறது.

“தொற்றுநோயின் காரணமாக, வீட்டுத் தொழிலாளர்கள் இந்த ஆண்டு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்; தங்கள் சொந்த வீடுகளிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாமல் போனது – குடும்ப வன்முறையால்,” என்று பி.எஸ்.ட்பிள்யூ.எஸ் நிர்வாக இயக்குனர் ஐரீன் சேவியர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் சட்டத்தில் அதிக வெற்றிடங்கள் உள்ளதால், வீட்டுத் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இல்லாமல் போனது, அவர்கள் உதவிக்கு அணுக குறைந்த வாய்ப்புகளே இருக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

எம்.சி.ஓ., குடும்ப உறுப்பினர்கள் அதிக நேரத்தை ஒன்றாகச் செலவிட கட்டாயப்படுத்தியதாக ஐரீன் கூறினார், இது வீட்டுத் தொழிலாளர்கள் மீதான பணிச்சுமையை அதிகரித்தது.

“இக்காலக்கட்டத்தில், ‘தாலியான் காசே’-வுக்கு, பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களிடமிருந்து வந்த அழைப்புகளில், 57 % அதிகரிப்பு ஏற்பட்டது என மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

“இருப்பினும், இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் அடிமைத்தனம் மற்றும் கட்டாய உழைப்பில் வைக்கப்பட்டிருந்த வீட்டுத் தொழிலாளர்களின் உண்மையான எண்ணிக்கையைப் பிரதிபலிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

ஐரீனின் கூற்றுப்படி, 2018-ம் ஆண்டு, பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில், உறுப்புகள் செயலிழப்புக்கு ஆளாகி மரணமடைந்த, 26 வயது இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் அடெலினா லிசாவோவின் வழக்கைப் போன்று இல்லாவிட்டால், இந்த ஒடுக்குமுறை வடிவங்கள் பதிவு செய்யப்படாது.

லிசாவோ தனது முதலாளியின் வீட்டிற்கு வெளியே, நாய்களுடன் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் பரவலாகப் பகிரப்பட்டபோதுதான் நிலைமை அம்பலமானது, ஆனால் தனது முதலாளியிடமிருந்து மீட்கப்பட்ட நேரத்தில் அவர் மிகமோசமான நிலையில் இருந்தார், சிறிது நாளில் அவர் இறந்துபோனார்.

“துரதிர்ஷ்டவசமாக, லிசாவோவின் வழக்கு, ஒரு வீட்டுப் பணியாளர் மரணமடைந்தால் கூட, ஒரு முதலாளி அவரைக் கொடுமைப்படுத்தினார், தவறாக நடந்துகொண்டார் என முதலாளி மீது குற்றம் சாட்டுவது கடினம் என்பதை நிரூபிக்க உதவியது; லிசாவோவின் முதலாளிக்கு உடல்நலக் குறைவு மற்றும் மேம்பட்ட வயது என்ற அடிப்படையில், இவ்வாண்டு செப்டம்பரில் அவர் விடுவிக்கப்பட்டார்,” என ஐரீன் கூறினார்.

இந்த ஆண்டு, பணியாளர்கள் துன்புறுத்தப்பட்ட வழக்குகள் குறைவாகவே ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டன, குறிப்பாக எம்.சி.ஓ. காலத்தில் வீட்டுத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் வன்முறைகள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்கள் நம் நாட்டிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, மலேசிய குடிநுழைவுத்துறையின் சிறந்த அமலாக்கம் அவசியமானது. வீட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் கடத்தப்படுவது மற்றும் அடிமைத்தனத்திற்குத் தள்ளப்படுவது போன்றவற்றைத் தடுப்பதில் குடிநுழைவுத்துறைக்கு ஒரு பெரிய பங்கு உண்டு என்று ஐரீன் கூறினார்.

புலம்பெயர்ந்தப் பெண் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் மலேசியா தோல்வியடைந்துவிட்டது என, 2019-ம் ஆண்டில், தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் ஆல்ஸ்டன் அளித்த அறிக்கையை அரசாங்கத்திற்கு நினைவூட்ட வேண்டும். மலேசியாவில் வீட்டுப் பணியாளர்கள், விடுப்பு நாட்கள், மருத்துவப் பாதுகாப்பு மற்றும் வேலை நேர கட்டுப்பாடுகள் போன்ற அடிப்படை பாதுகாப்புகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“எனவே, உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டிருக்கும் இந்த ஆண்டில், சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் தினத்தை நாம் கடைப்பிடிக்கும்போது, சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வையில் நாட்டின் தொழிலாளர் தரத்தை மேம்படுத்துவதற்காக, ஐ.எல்.ஓ. மரபுகள் போன்ற சர்வதேசக் கருவிகளைப் பின்பற்றுமாறு, முக்கியமாக, ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமென பி.எஸ்.டபிள்யூ.எஸ். தனது சக ஆர்வலர்களுடன் இணைந்து மலேசிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுகிறது,” என்று ஐரின் கூறினார்.