பெரியக் கூட்டணி : எதிர்க்கட்சித் தலைவராக இருக்கப்போவது யார்? – ஜொகூர் ஏ.எம்.கே.

சில பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்கள் ஒரு பெரிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதில் ஒன்றிணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளனர் என்ற ஊகங்கள் வலுத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை வழிநடத்தப்போவது யார் எனும் கேள்வி ஜொகூர் பி.கே.ஆர். இளைஞர்கள் (ஏ.எம்.கே) மத்தியில் எழுந்துள்ளது.

நேற்று ஓர் ஊடக அறிக்கையில், ஜொகூர் ஏ.எம்.கே. தலைவர் ஆர் உனேஸ்வரன், பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே, அதற்கான திட்டங்களை மறுசீரமைப்பதற்கும் வலிமையை ஒருங்கிணைப்பதற்கும் பி.எச். தலைமைக் குழு விரைவில் கூட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு பார்வையையும் யோசனையும் கருத்தில் எடுத்துகொள்ள வேண்டும்.

“இருப்பினும், ஒரு பெரிய கூட்டணியை உருவாக்க பி.எச்.-க்கு ஒரு தெளிவான பொறிமுறை (mekanisme) இருக்க வேண்டும். புதியக் கூட்டணி உருவாகும் முன்பு அதை ஆராய்ச்சி செய்து ஒப்புக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

“ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கி அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட விரும்பினால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை யார் வழிநடத்துவார்கள்?

“அன்வர் இப்ராஹிம் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக தக்கவைக்கப்படுவாரா?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.

மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டத்தைப் பி.எச். கூட்டணி நிராகரிக்கத் தவறியதை அடுத்து, அமானா ஜனாதிபதி மொஹமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் எதிர்க்கட்சிகளிடையே அரசியல் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க முன்மொழிந்ததைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.

முந்தைய கூட்டு அறிக்கையில், பி.எச்.-இன் நண்பர்களிடையேப் பொதுவான ஜனநாயக விழுமியங்கள், நல்லாட்சி, ஊழல் எதிர்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களுடன் போராட்டத்தை அணிதிரட்டுவதற்கு கிடைக்கக்கூடிய நேரத்தையும் வளங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் இருவரும் வலியுறுத்தினர்.

இருப்பினும், ஒரு பெரிய இணைப்பு திட்டம் என்பது இரு தரப்பிலிருந்தும் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஒரு யோசனை என்று யூனேஸ்வரன் வாதிடுகிறார்.

“பி.கே.ஆர் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், அன்வர் மக்கள் ஆணையை மீட்டெடுக்க நல்ல முயற்சிகளை மேற்கொண்டார்.

“நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மூலம், மக்களின் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தோல்வியுற்ற காரணத்தை அன்வரின் தோள்களில் மட்டும் வைக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.

டிஏபி, அமானா, வாரிசான், சரவாக் பெர்சத்து கட்சி (பிபிஎஸ்), உப்கோ, மூடா கட்சி மற்றும் சுயேட்சை எம்.பி.க்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அன்வரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க ஒருமனதாக ஒப்புக் கொண்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“டாக்டர் மகாதீர் பி.எச். அரசாங்கத்தைப் பாதுகாக்கத் தவறியது, நாட்டிலும் பி.எச்.சிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.

பதிவுக்காக, பி.எச்.-இல் தற்போது 91 எம்.பி.க்கள் உள்ளனர். வாரிசான் (8), பெஜுவாங் (4), பிபிஎஸ் (2), உப்கோ (1), மூடா (1) மற்றும் ஒரு சுயேட்சை என ஆக மொத்தம் 108 எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் உள்ள நிலையில், தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் 113 எம்.பி.க்கள் உள்ளனர்.