பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர ஊழியர்களாகப் பணியமர்த்த வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி, அரசு ஒப்பந்தத் தொழிலாளர் வலையமைப்பு (ஜே.பி.கே.கே.) நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸுக்கு ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளது.
அரசாங்க வளாகங்களில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் தோட்டக்காரர்களின் ஒப்பந்த முறையை இரத்து செய்து, அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என முன்மொழிந்துள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் எஸ் அருட்செல்வன் கூறினார்.
2016 முதல், அத்தன்னார்வத் தொண்டு நிறுவனம், பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது, சம்பளத்தை செலுத்தாமல் தவிர்ப்பது அல்லது தாமதிப்பது, ஊதியத்தை நியாயமற்ற முறையில் குறைத்தல் மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்குப் பணத்தைப் பங்களிப்பு செய்யாதது போன்ற பல புகார்களைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
“மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், ஒப்பந்த முறையின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லை, ஏனெனில் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை குத்தகையாளர்கள் மாற்றப்படுவார்கள். தொழிலாளர்கள் இதுவரை இருந்த தங்கள் சேவை ஆண்டுகளை இழந்து, மீண்டும் புதிய தொழிலாளர்களாக மாறுவார்கள். பல சமயங்களில், குத்தகையாளர் மாறும் போது வேலை இழந்த தொழிலாளர்களும் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
நேற்று புத்ராஜெயாவில் உள்ள அமைச்சில், அதன் பெருநிறுவனத் தொடர்புப் பிரிவு தலைவர், ஜூலினா ஜோஹானிடம் மனுவை ஒப்படைத்த பின்னர் அருட்செல்வன் ஊடகங்களிடம் பேசினார்.
மனுவைத் தவிர, இந்த முன்மொழிவு குறித்த தனது ஆராய்ச்சியையும் ஜே.பி.கே.கே. அரசிடம் ஒப்படைத்தது; இதன்வழி அரசாங்கம் ஆண்டுக்கு RM200 மில்லியன் வரை சேமிக்க முடியும் என்று அது கூறியுள்ளது. இதேக் குறிப்பாணை அடுத்த ஆண்டு பிரதமர் முஹைதீன் யாசினுக்கு அனுப்பப்படும்.
- பெர்னாமா