எதிர்க்கட்சியில் ‘பெரும் கூட்டணி’, ஆனால் ‘மகாதீர் இல்லை’ – பி.கே.ஆர்.

எதிர்க்கட்சியில் ஒரு “பெரும் கூட்டணியை” உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திறந்திருப்பதாகக் கூறிய சிலாங்கூர் பி.கே.ஆர். இளைஞர்கள், அந்த ஏற்பாட்டில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவைச் சேர்க்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

சிலாங்கூர் பி.கே.ஆர் இளைஞர்கள் அக்கூடணியில் மகாதீரை ஈடுபடுத்தக்கூடாது என்று கோரியுள்ளனர்.

“பக்காத்தான் ஹராப்பான் அதன் கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது நல்லது. அதே தவற்றை, மீண்டும் செய்ய வேண்டாம்,” என்று சிலாங்கூர் பி.கே.ஆர். இளைஞர் தகவல் தொடர்பு இயக்குனர் மொஹமட் கைரூல் ங்ஙாடோன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் உட்பட சில எதிர்க்கட்சித் தலைவர்கள், ஹராப்பானுக்கு அப்பால், எதிர்க்கட்சியில் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவிட் -19 தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், முஹைதீன் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என்றும்; அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தடுப்பூசி தொடங்கப்பட உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

15-வது பொதுத் தேர்தலுக்கு ஹராப்பான் கூட்டணியைத் தயார் செய்ய வேண்டும் என்பதில் சிலாங்கூர் பி.கே.ஆர். இளைஞர்களும் உடன்படுகிறார்கள் என்று கைரூல் கூறினார்.
எவ்வாறாயினும், பி.என்.-உடன் இணங்காத பிறக் கட்சிகளுடன் ஒரு பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கான முன்மொழிவு, ஹராப்பான் தலைவர்கள் சபையில் மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

டிசம்பர் 17 அன்று கூட்டப்படவிருந்த சபை, திடீரென இரத்து செய்யப்பட்டது.

டி.ஏ.பி மற்றும் அமானா, எதிர்க்கட்சியில் “அரசியல் மீட்டமைப்பிற்கு” அழைப்பு விடுத்ததன் காரணமாக பி.கே.ஆர். பின்வாங்கியதில், கூட்டம் நிறுத்தப்பட்டதாக சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.