‘ஜிஇ15-க்குப் பிரச்சாரம் செய்வது கடினம், சிலர் வாக்களிக்க விரும்பவில்லை’ – மாட் சபு

அடுத்தப் பொதுத் தேர்தல் (ஜி.இ.) போட்டியிடும் கட்சிகளுக்குக் கடினமான ஒரு சவாலாக அமையுமென அமானா தலைவர் மொஹமட் சாபு வர்ணித்தார்.

கடந்த ஜி.இ.யில் பி.எச்.-க்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்குத் துரோகம் செய்ததன் காரணமாக, மக்களில் சிலர் மீண்டும் வாக்களிப்பதில் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்.

“(அவர்கள் சொன்னார்கள்) நாங்கள் ஏன் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தோம்? வென்ற கட்சி ஆட்சி செய்வதற்குப் பதிலாக, மக்கள் பிரதிநிதிகளைக் கட்சி மாற்றி, தோல்வியுற்ற கட்சி ஆட்சி செய்ய முடியும் என்றால்…,” என்று கோலாலம்பூரின் விஸ்மா அமனாவில், நேற்று நடைபெற்ற கூட்டரசுப் பிரதேசத்தின் 5-வது மாநாட்டை தொடக்கி வைத்தபோது அவர் கூறினார்.

ஷெரட்டன் நடவடிக்கையைத் தொடர்ந்து பிப்ரவரி மாத இறுதியில் பி.எச். அரசாங்கத்தின் தோல்வியை மொஹமட் குறிப்பிட்டார். அவர்களின் முன்னாள் கூட்டாளியான பெர்சத்து மற்றும் 10 பி.கே.ஆர். எம்.பி.க்கள் கூட்டணியை விட்டு வெளியேறி, தேசியக் கூட்டணியின் (பி.என்.) கீழ் தேசிய முன்னணி, பாஸ், ஜி.பி.எஸ், பிபிஎஸ் மற்றும் ஸ்டார் உடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கியது.

தேசியக் கூட்டணி இப்போது அதிகாரப்பூர்வமாக பாஸ், பெர்சத்து, ஸ்டார் மற்றும் எஸ்ஏபிபி, மேலும் பங்கேற்காத தேசிய முன்னணி ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

கடந்த மாதம், முஹைதீன், ஜி.இ.யை விரைவில் நடத்த விரும்புவதாகக் கூறினார், ஆனால் கோவிட் -19 பாதிப்பால் இந்த நோக்கம் முறியடிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நிலைமை அனுமதித்தால், கோவிட் -19 முடிவடைந்த பின்னர், மகக்ள் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆணையை மக்களுக்கு திருப்பித் தர ஜி.இ. நடைபெறும் என்று முஹைதீன் கூறினார்.

‘பிரதமருக்கு வெட்கம் இல்லை’

மொஹமத்தின் கூற்றுப்படி, முஹைதீன் இராஜினாமா செய்ய மறுப்பது தன்னை ஒரு திறமையற்ற மற்றும் ‘வெட்கமில்லாதத் தலைவர்’ என்று காட்டுகிறது.

“அவர் ஒரு திறமையற்ற பிரதமர். ஜப்பானிலோ அல்லது கொரியாவிலோ இதுபோல் நடந்தால், இந்நேரம் அவர்கள் இராஜினாமா செய்திருப்பார்கள், ஆனால் மலேசியாவில் இவர் வெட்கப்படவில்லை.

“அவர் பின் கதவு வழியாக ஆட்சிக்கு வந்ததால், தன்னால் முடிந்தவரை அந்தப் பதவியைப் பாதுகாப்பார்,” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் 2021 வரவுசெலவுத் திட்டம், வெறும் மூன்று வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதை அவர் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

“ஜி.இ. குறித்த எல்லா வகையான வதந்திகளும் உள்ளன, சிலர் மார்ச் என்று கூறுகிறார்கள், சிலர் ஜூன் என்று கூறுகிறார்கள். ஆனால் அது (ஜி.இ) மிக நெருக்கத்தில் நடத்தப்படலாம், ஏனென்றால் நமது பிரதமர் மாட்டிக்கொண்டுள்ளதை நாங்கள் அறிவோம். அவர் சுதந்திரமாக இல்லை,” என்றார்.