லிம் : எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற டிஏபி ஒருபோதும் முன்மொழியவில்லை

டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், வெள்ளிக்கிழமை பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமைச் சந்தித்து டிஏபி தலைமை, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற ஒருபோதும் முன்மொழியவில்லை என்று உறுதியளித்தார்.

இஸ்கந்தர் புத்ரி எம்.பி.யுமான அவர், பி.எச். பொதுச்செயலாளர் சைஃபுதீன் நாசுதியோனின் சமீபத்திய அறிக்கையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.

“மலேசியாவின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஒரு புதிய தேசிய ஒருமித்த கருத்துடன், புதிய தொடக்கத்தைத் திரட்ட வேண்டும் … இப்போது அக்கருத்திற்காக செயல்பட வேண்டிய நேரம் இது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜிம்பாப்வே அல்லது வெனிசுவேலா போன்ற தோல்வியுற்ற நாடுகளைப் போல் மலேசியா வரக்கூடாது என்றும் லிம் கூறினார்.

“மலேசியாவிற்கான ஒரு புதிய தேசிய ஒருமித்த கருத்தை விரும்பாதவர்கள், அதன் உருவாக்கத்தை நாசப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

“நான் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமைச் சந்தித்தபோது, ​​டிஏபி தலைமை ஒருபோதும் எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற முன்மொழியாது என்று அவருக்கு உறுதியளித்தேன், ஆனால் ஒரு புதிய தேசிய ஒருமித்த கருத்தினூடாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் பலப்படுத்துவதில், ஒன்றுபடுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு புதிய திசையை எதிர்க்கட்சி கொண்டு வர வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

“பக்காத்தான் ஹராப்பான் பொதுச்செயலாளரின், சமீபத்திய அறிக்கையால் நான் அதிர்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவர் எதிர்க்கட்சி ஒப்பந்தத்தில் மூன்று கட்சிகளுக்காகவும் பேச வேண்டும், ஓர் அரசியல் கட்சிக்காக மட்டுமல்ல,” என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.