கோவிட் 19 : இன்று 1,340 புதிய நேர்வுகள், 4 இறப்புகள்

சுகாதார அமைச்சு இன்று, 1,340 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வந்தவை.

தரவரிசையில் முதலிடத்தில் சிலாங்கூர் 441 நேர்வுகளும், அடுத்த நிலையில் கோலாலம்பூரும் (284) உள்ளன.

அதேவேளையில், 1,067 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று நால்வர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சபாவில் இருவர், பினாங்கு மற்றும் சிலாங்கூரில் தலா 1 என மொத்தம் 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவசரப் பிரிவில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 57 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை என டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 441, கோலாலம்பூரில் 284, சபாவில் 196, நெகிரி செம்பிலானில் 169, ஜொகூரில் 156, பினாங்கில் 30, லாபுவானில் 27, பஹாங்கில் 12, பேராக்கில் 10, கெடாவில் 6, சரவாக்கில் 3, புத்ராஜெயாவில் 2, மலாக்கா மற்றும் கிளந்தானில் தலா 1.

மேலும் இன்று, 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

எஸ்தேட் மாஜு திரளை – சபா, கோத்தா கினபாலு, துவாரான் & புதாதான் மாவட்டங்கள்; பத்து 39 திரளை – ஜொகூர், பொந்தியான் மாவட்டம்; மெட்ரோபோலிஸ் கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், கெப்போங் மாவட்டம்.