தாய்மொழிப் பள்ளிகளை மூட இன்சான் பெகா ஆதரவு! – தமிழர் அமைப்புகள் கண்டனம்

தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டுமென்ற பெர்காசா புத்ரா கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த மலேசிய இன்சான் பெகா (Insan Peka) இயக்கத்தைச் சார்ந்த பாலகோபாலின் செயலுக்கு மலேசியத் தமிழர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலகக் கல்வி அமைப்பான யுனெசுகோவின் (UNESCO) பரிந்துரையின்படி தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயேக் கல்வியைக் கற்க வேண்டும், தாய்மொழி உரிமை அவரவர் பிறப்புரிமை, அதுமட்டுமின்றி மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலும் தாய்மொழிப் பள்ளிகள் இயங்கவும் காக்கப்படவும் உரிமை இருக்கிறது.

அதை அவமதிக்கும் வகையில் தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டுமென வழக்குத் தொடுப்பதும், அதை ஆதரிப்பதும் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டின் ஒருமைப்பாட்டையும் உரிமையும் சீர்குலைக்கிறது என்று கூறி, 25 பொது அமைப்புகள் இணைந்து ஒரு கண்டனக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

“யுனெசுகோவின் பரிந்துரையையும் தொடக்கக் கல்வியின் கற்றல் கற்பித்தலின் கோட்பாட்டையும் புரிந்துகொள்ள தவறிய இன்சான் பெகா இயக்கத்தின் தலைவர் பாலகோபலுக்குத் தாய்மொழிப் பள்ளியை மூட சொல்வதற்கு என்ன தகுதியும் உரிமையும் இருக்கிறது,” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நாட்டில் தமிழ்ச் சமூகத்திற்கு இருக்கும் உரிமை, சொத்துடமை என்பது தமிழ்ப் பள்ளிகளும் கோவில்களும் தான். இவ்விரண்டும் நம் கண்கள். அதிலும் இனத்தின் அடையாளமாக இருக்கும் தாய்மொழிப் பள்ளிகளை மூட சொல்வது பேரிழப்பு என்றும் கூறியுள்ளனர்.

“1816-ம் ஆண்டில், பினாங்கு ஃப்ரீஸ்கூலில் (Penang Free School) தொடங்கியத் தமிழ் வகுப்பிலிருந்து, சுமார் 204 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகள் இம்மண்ணில் நிலைத்து வருகின்றன. இவ்வளவு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தாய்மொழிப் பள்ளிகளை மூட சொல்வது தீய எண்ணம் கொண்ட அறிவின்மை செயலாகும்.

“இந்த 204 ஆண்டுகள் தொடர்ச்சிக்கு எத்தனையோ கல்விமான்கள், அறிஞர்கள், சமுதாயத் தலைவர்கள், இனப்பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரது உழைப்பு, ஈகம், அற்பணிப்பு அடங்கி இருக்கிறது.

“இதையெல்லாம் கொஞ்சம் கூட எண்ணிப் பாராது, குருட்டுத்தனமாக தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டுமென கூக்குரலிடுவது வேடிக்கையாக இருக்கிறது,” என்று அவர்கள் மலேசியாகினியிடம் கூறினர்.

இதுவரை சீர்குலையாத ஒற்றுமை இப்போது சீர்குலைந்ததா? 

உண்மையில் தாய்மொழிப் பள்ளிகளை அகற்றினால்தான் நாட்டின் ஒற்றுமை சீர்குலையும், உரிமைப் போர் தொடங்கும் என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

தற்போது உள்ள புள்ளி விளத்தம்படி, நாட்டில் 527 தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன, இன்னும் சில பள்ளிகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன. இங்கே 527 தலைமை ஆசிரியர்களும் 9000-திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்களும் பணிபுரிகிறார்கள். 81,420-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்று வருகிறார்கள். அதோடு பல ஆயிரம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்றும் அறியாதவர்களா, புரியாதவர்களா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“தாய்மொழிப் பள்ளிகள்தான் தொடக்கப் பள்ளி மாணவர்களைச் சீர்படுத்துகிறது. எதிர்காலத்திற்கு அவர்களைச் செம்மைபடுத்துகிறது. குறிப்பாக, தாய்மொழி வழியாக கணிதம், அறிவியல் படிப்பவர்களுக்கு ஆய்வுச் சிந்தனை (Critical Thinking) ஏரணம் (Logic) காரணவியல் (Reasoning) புத்தாக்கச் சிந்தனை (Innovative) முதலான திறன்கள் மிகச் சிறப்பாக வளரும்.

“பிரான்சு, ஜெர்மன், ஜப்பான், சீனா, கொரியா முதலான நாடுகளில் அதிகமான கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் உருவாகுவதற்குக் காரணம், அந்த நாடுகளில் கணிதம், அறிவியலைத் தங்களின் தாய்மொழியில் படிப்பதுதான் என்பது உலகறிந்த உண்மை,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

தாய்மொழிப் பள்ளியில் பயின்றவர்கள் பெரும்பாலோர் தலை சிறந்தவர்களாக உருவாகியிருக்கிறார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விரிவுரையாளர்கள், அறிவியலாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பற்பல பரிமானத்தில் பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் பல்வகைப் போட்டிகளிலும் மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அந்த அறிக்கையின் வாயிலாக அவர்கள் கூறியுள்ளனர்.

“தாய்மொழிப் பள்ளிகளைச் சீண்டி, தம்மின ஆதரவாளர்களிடையே கதாநாயகனாக திகழ, சுயநலமாக சில அரசியல்வாதிகள் முயன்று வருகிறார்கள்.

“இப்படிப்பட்டவர்களையும், அதற்கு ஆதரவைத் தரும் பாலகோபால் போன்ற அறிவிலிகளின் முகத்திரையைக் கிழித்து, தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான துரோகிகளாக மக்கள் முன் அடையாளப்படுத்த வேண்டும்.

“தமிழ்மொழி, தமிழர் இனம் தமிழ்ச் சமய வழிபாடு தொடர்பான நிலைபாடுகளை, நாட்டில் உள்ள தமிழர் அமைப்புகளோடு கலந்தாய்வு செய்து முடிவெடுக்காமல், தான்தோன்றித்தனமாக தமிழினத்தின் நிகராளிப் போல் பொது வெளியில் கருத்திடுவதை இதோடு அவர் நிறுத்திகொள்ள வேண்டும்.

“இறுதியாக, ஒன்றை நினைவூட்டுகிறோம், எங்கள் இனத்தின் அடையாளமாகத் திகழும் தாய்மொழிப் பள்ளிகளைக் காக்க, நாங்கள் எதுவரையும் செல்வோம் என்பதைப் புத்ரா கட்சிக்கும் அதற்கு ஆதரவு தந்த இன்சான் பெகா பாலகோபாலுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள 25 மலேசியத் தமிழர் அமைப்புகள் கூறின.

  1. உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்
  2. மலேசியச் தமிழ்ச்சமயப் பேரவை
  3. மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கம், சுங்கை சிப்புட்
  4. வள்ளலார் அன்பு நிலையம், புந்தோங், ஈப்போ
  5. கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம்
  6. மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கம்
  7. மலேசியப் புதியத் தமிழ் தலைமுறை இயக்கம்
  8. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம்
  9. மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம்
  10. மலேசியத் தமிழர் செயல்குழு இயக்கம்
  11. தமிழர் ஒற்றுமை இயக்கம்
  12. மலேசிய எழுச்சி முன்னணி
  13. பேராக் பாரிட் புந்தார்தமிழ் வாழ்வியல் இயக்கம்
  14. மலேசியத் தங்கத்தமிழர் இயக்கம்
  15. மாணவர் வசந்தம் கழகம்
  16. தமிழ் வளர்ச்சிக் கழகம்
  17. கிள்ளான் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
  18. குறிஞ்சித்திட்டு தமிழ் கழகம், ஈப்போ, பேராக்
  19. பினாங்கு தமிழ் வாழ்வியல் இயக்கம்
  20. தமிழ் வாழ்வியல் இயக்கம் பாரிட் புந்தார், பேராக்
  21. சரசுவதி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சுங்கை பூலோ, சிலாங்கூர்
  22. கம்பார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் கழகம்
  23. தமிழ் வேங்கை
  24. மலேசியத் தமிழியல் ஆய்வுக் களம்
  25. சிலாங்கூர் மக்கள் சமுகநல இயக்கம்