முதலாளிகளால் சம்பளம் கொடுக்கப்படாமல், அடைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 35 வெளிநாட்டு பெண்களை மலாக்கா மற்றும் சிலாங்கூர் போலீசார் மீட்டனர்.
அரச மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்.) குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமது கூறுகையில், ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்பு (D3) பிரிவுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 5 சோதனைகளில் இவர்கள் மீட்கப்பட்டனர்.
மலாக்கா தெங்காவில் நடந்த சோத்னையில், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, 32 இந்தோனேசியர்கள் மற்றும் 1 கம்போடியர், பெட்டாலிங் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட சோத்னையில் 2 இந்தோனேசியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள், 2018 முதல், மலாக்காவில், ஒரு துப்புரவு சேவை நிறுவனத்தில் வீடு வீடாகச் சென்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார் என்று ஹூசிர் கூறினார்.
“மாதத்திற்கு RM900 முதல் RM1200 வரை அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
“இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வாக்குறுதியளித்தபடி சம்பளம் கொடுக்காமல், அவர்கள் வீட்டில் பூட்டப்பட்டிருந்தனர்; அவர்களின் நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டதோடு, கைப்பேசிகளைப் பயன்படுத்தவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
“மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போலிஸ் சோதனையின்போது, அவர்களின் முதலாளிகள் என்று நம்பப்படும் 33 முதல் 42 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் பெண்களையும், 40 வயதில் ஓர் ஆடவரையும் விசாரணைக்கு உதவ கைது செய்துள்ளதாகவும் ஹுசிர் கூறினார்.
அந்த மூன்று பெண்கள் மீதும், தனிநபர் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் சட்டம் (அட்டிப்சம்) 2007, பிரிவு 12-ன் கீழ், 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும், இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34-உடன் சேர்ந்து படிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டால், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கக்கூடும்.