முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் தலைமையிலான கட்சி பதிவு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண, முன்னாள் அட்டர்னி ஜெனரல் தோமி தோமஸ் மற்றும் வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் ஆகியோரை இக்காத்தான் டெமோக்கிராட்டிக் மலேசியா கட்சி (மூடா) நியமித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்த பதிவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், மலேசிய சங்கங்களின் பதிவு இலாகா (ஆர்ஓஎஸ்) மீதானச் சட்ட நடவடிக்கை குறித்து கட்சி தற்போது பரிசீலித்து வருகிறது.
தங்கள் கட்சியைப் பதிவு செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்க ஏழு நாட்கள் அவகாசத்தை அக்கட்சி கொடுத்துள்ளது, இல்லையே சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அது திட்டமிட்டுள்ளது.
“மூடாவை ஒரு முறையான அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான செயல்முறை செப்டம்பர் 17, 2020 முதல் தொடங்கியது. இருப்பினும், 2020 டிசம்பர் 21 வரை, மூடா பதிவு தொடர்பாக எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை.
“எனவே, இன்று, மூடாவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டுமெனக் கோரும் வழக்கறிஞர் கடிதத்தைச் சமர்ப்பிக்க, 100 மூடா ஆதரவாளர்களுடன் ஆர்ஓஎஸ்-க்கு வந்துள்ளோம்,” என்றார் சையத்.
செப்டம்பர் 17-ல், பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் தலைவர் (ஆர்மடா) மூடா கட்சி பதிவு விண்ணப்பத்தை ஆர்ஓஎஸ்-க்குச் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மூடா பதிவின் தாமதம் ஏற்கத்தக்கது அல்ல, பதிவை நிராகரிக்க அல்லது தாமதப்படுத்த எந்தவொரு காரணமும் வழங்கப்படவில்லை.
“தேசியக் கூட்டணியின் பதிவுக்கு, இன்றைய அரசாங்கத்தின் கீழ் 3 நாட்கள் மட்டுமே ஆனது. பழைய பிஎன் அரசாங்கத்தின் போது, பெர்சத்து கட்சி பதிவுக்கு 30 நாட்கள் ஆனது.
“இந்தக் கட்சியின் பதிவு தொடர்பான பிரச்சினையை, மூடா தேசியச் சட்டத்திடம் ஒப்படைக்கிறது, உடனடியாக அதை அங்கீகரிக்க ஆர்ஓஎஸ்-ஐ வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.