சுகாதார அமைச்சு இன்று, 2,018 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 1 இறப்பும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வந்தவை. ஜொகூர் இரண்டாவது நிலையிலும், அதைத் தொடர்ந்து சபாவிலும் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதேவேளையில், 1,084 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
இன்று, 50 வயது நிரம்பிய வெளிநாட்டினர் ஒருவர், சபா, துவாரான் மருத்துவமனையில் காலமானார்.
அவசரப் பிரிவில் 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 55 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
சரவாக் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 1,204, ஜொகூரில் 278, சபாவில் 247, கோலாலம்பூரில் 127, நெகிரி செம்பிலான் 58, லாபுவானில் 29, பேராக்கில் 21, பினாங்கில் 18, பஹாங்கில் 12, மலாக்காவில் 9, கிளந்தானில் 6, புத்ராஜெயாவில் 5, கெடாவில் 3, திரெங்கானுவில் 1.
மேலும் இன்று, 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 5 பணியிடம் சார்ந்தவை. புதிய 8 திரளைகள் பின்வருமாறு :-
பணியிடம் சார்ந்த பேக்காபுரி திரளை – சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம்; பணியிடம் சார்ந்த பத்து பெசார் திரளை – சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம்; பணியிடம் சார்ந்த டவர் திரளை – சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட்& செப்பாங் மாவட்டங்கள் & கோலாலம்பூர், தித்திவங்சா, செராஸ் மாவட்டங்கள் மற்றும் பஹாங், தெமெர்லோ மாவட்டம்; பெலாங்கி கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், கெப்போங் மாவட்டம்; வவாசான் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம், சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் மற்றும் புத்ராஜெயா; டெலிமா திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம் & சிலாங்கூர், கோம்பாக் & உலு லங்காட் மாவட்டங்கள்; பணியிடம் சார்ந்த ஜே பண்டார் திரளை – லாபுவான்; பணியிடம் சார்ந்த மே இண்டா திரளை – பினாங்கு, தீமோர் லாவுட், பாராட் டாயா, வட செப்ராங் பிறை, மத்திய செப்ராங் பிறை & தென் செப்ராங் பிறை.