‘ஓர் அமைச்சராக, நான் மிகவும் வெட்கப்படுகிறேன்’

இன்று, கஜாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையைப் பார்வையிட்ட மனிதவள அமைச்சர் எம்.சரவணன், அத்தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை, நவீன கால அடிமைகள் என்றும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை விட மோசமானது என்றும் விவரித்தார்.

“மலேசியாவில் இதுபோன்ற ஓர் இடம் இருக்கிறது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, இதுபோன்ற தூய்மையற்ற மற்றும் மோசமான சூழ்நிலையில் அவர்களால் எவ்வாறு வாழ முடியும் என்பதை இன்னும் உறுதியாக நம்ப முடியவில்லை,” என்று அவர் கூறியதாக ஆஸ்ட்ரோ அவானி மேற்கோள் காட்டியுள்ளது.

இன்று காலை, அத்தொழிற்சாலைக்குத் திடீர் வருகை மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் சரவணன் இதனைத் தெரிவித்தார்.

தொழிற்சாலைத் தொழிலாளர்கள் ‘ஒரு குறுகிய பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போல்’ வாழ்ந்து வருவது தெரிகிறது.

அங்கு மொத்தம் 781 ஊழியர்கள் உள்ளனர், அதில் 759 பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள், கொள்கலன்களை வசிப்பிடங்களாக மாற்றி, அதில் அவர்களைத் தங்க வைத்துள்ளனர்.

எனவே, நாட்டில் இருக்கும் சட்டத்திற்கு இணங்கி, வெளிநாட்டு தொழிலாளர்களைக் கையாளுமாறு முதலாளிகளைச் சரவணன் கடுமையாக எச்சரித்தார்.

“ஓர் அமைச்சராக, நான் இதுபோன்றதொரு மோசமான சூழ்நிலையைப் பார்க்க மிகவும் வெட்கப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.