கையுறை உற்பத்தியாளரான பிரைட்வே ஹோல்டிங் , நேற்று தனது தொழிற்சாலை ஒன்றில் நடந்த சோதனையில், மிக மோசமான நிலையில் வாழும் அதன் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் நிலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையை மறுத்துள்ளது.
ஆயினும், மனிதவளத்துறை அமைச்சர் எம். சரவணன் தங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அத்தொழிற்சாலையின் கூற்றை மறுத்துள்ளார்.
நேற்று, கஜாங்கில் உள்ள பிரைட்சைட் துணை நிறுவனத்தில், பல்வேறு ஏஜென்சிகள் நடத்திய சோதனையில் பங்கேற்ற சரவணனைத் தொடர்பு கொண்டபோது, “இதுபோன்ற ‘நவீன அடிமைத்தன’ குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, முதலாளிகள் அதற்கு மறுப்பு தெரிவிப்பது பொதுவானது,” என்றார்.
“அவர்கள் சொல்ல விரும்புவதை அவர்கள் சொல்லட்டும்.
“சட்டத்தை நிலைநிறுத்த போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன….
“முதலாளிகள் அதை மறுப்பது பொதுவானது, அது (மட்டுமே) நிலைமை குறித்த கூடுதல் படங்களை வெளியிட நம்மை கட்டாயப்படுத்தும்.
“இருப்பினும், சோதனையின் போது, போதுமான ஊடகங்கள் எங்களோடு இருந்தன,” என்று அவர் கூறினார்.
தொழிற்சாலைக்குப் பின்னால், மூன்று மாடிகள் வரை இரண்டு கொள்கலன்களில் 781 தொழிலாளர்கள் வசித்து வருவதை இந்தச் சோதனையில் நாங்கள் கண்டோம் என்றார் அவர்.
தொழிலாளர்களின் வாழ்க்கை சூழ்நிலைகள், தான் இதுவரைக் கண்டிராத மோசமானவை என்று சரவணன் சொன்னதாகக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட தொழிலாளர்களில், 759 பேர் வெளிநாட்டினர், 22 பேர் உள்ளூர்காரர்கள் எனத் தெரியவருகிறது.
“நான் இதனை நவீன அடிமைத்தனம் என்று அழைக்கிறேன்.
“சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் போது இதை நாம் பார்த்திருந்தாலும், இந்த நிலைமை இன்றும் நிகழ்வதைக் கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்… என்று சரவணன் கூறியதாக ஆஸ்ட்ரோ அவானி மேற்கோளிட்டுள்ளது.
அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் கொள்கலன்களை, உலு லங்காட் மாவட்ட அலுவலகம் பறிமுதல் செய்துள்ளதாகவும், தொழிலாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளதாகவும் மலேசியாகினி -யிடம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பிரைட்வே மனித வள மேலாளர் ஆலிஸ் மைக்கேல், 450 தொழிலாளர்கள் மட்டுமே அந்த இடத்தில் வசிப்பதாகவும், ஆரம்பத்தில் அவர்கள் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தில் வசித்து வந்ததாகவும் கூறினார்.
“அங்கு 450 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் விடுதிகளைக் கொண்டுள்ளனர், விடுதிகள் தூரத்தில் இருப்பதால், சிறிது காலத்திற்கு அவர்கள் இங்குக் கொண்டுவரப்பட்டனர்,” என்று மைக்கேல் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த சரவணன், தொழிலாளர்கள் தொடர்பான இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து, நமது நாட்டின் பிம்பத்தைக் காப்பாற்றுவதற்கான கடமையை மட்டுமே தனது அமைக்சு மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
புதிதாகத் திருத்தப்பட்ட வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புத் தர நிர்ணயச் சட்டம் 1990 (சட்டம் 446) -இன் கீழ், அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர முடியுமா என்று கேட்டதற்கு, சரவணன் தனது தரப்பு இந்த விஷயத்தை ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
விசாரணைக்கு உதவ, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை, அடுத்த வாரம் பாங்கி மனிதவள அலுவலகத்திற்கு அழைத்துள்ளதையும் சரவணன் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, சிலாங்கூர் சுகாதாரத் துறை தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ், டிசம்பர் 24 முதல் டிசம்பர் 30 வரை அத்தொழிற்சாலையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.