2018-ல், தனபாலன் சுப்பிரமணியத்தின் மரணத்திற்குக் காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் என்று குரோனர் நீதிமன்றம் சமீபத்தில் கண்டறிந்ததை அடுத்து, தடுப்புக்காவலின் போது ஏற்பட்ட அனைத்து மரணங்களையும் விசாரிக்க, ஒரு சுயாதீனமான வெளி அமைப்பை அமைக்குமாறு மலேசிய வழக்கறிஞர் மன்றம் கேட்டுக்கொண்டது.
காவலில் இருக்கும் தனிநபர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கவனித்துக்கொள்வது தடுப்பு மைய அதிகாரியின் பொறுப்பு என்று சட்டம் கூறுகிறது என அதன் தலைவர் சலீம் பஷீர் கூறினார்.
“மலேசிய வழக்கறிஞர் மன்றம் அந்தத் தீர்ப்பைப் பாராட்டுகிறது; அதேசமயம் நாடு முழுவதும் தடுப்பு மையங்களில் மருத்துவப் பிரிவுகளை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் அனைவருக்கும், மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்வதோடு, சுகாதாரமான அடிப்படை வசதிகளை அவர்கள் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டுமெனத் தடுப்புக்காவல் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
2018 ஏப்ரல் 17-ல், ஷா ஆலம் தடுப்புக்காவலில் இருந்தபோது, இறந்துபோன 38 வயது தனபாலனைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.
அந்த நேரத்தில், ஊடகங்களின் செய்திகளின்படி, 4 நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை காரணமாக அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
மயக்க நிலையில் காணப்பட்ட அவரை ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
போலீசாரின் அலட்சியம் தான் தனபாலனின் மரணத்திற்குக் காரணம் என்று ஷா ஆலம் குரோனர், ரோபியா மொஹமட் அறிந்துள்ளதாக, நேற்று ஃப்ரீ மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
வக்கீல் எம். விஸ்வநாதனை மேற்கோள் காட்டி, தனபாலனின் இதயத்தில் ‘மாரடைப்பு பாலம்’ இருப்பதைத் தடயவியல் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று ரோஃபியா கண்டுபிடித்தார், அது ஒரு நபருக்குத் திடீர் மரணத்தை ஏற்படுத்தாது என அந்த அறிக்கை கூறியுள்ளது.
இருப்பினும், தனபாலன் எலி சிறுநீரின் காரணமாக `லெப்டோஸ்பிரோசிஸால்` அவதிப்பட்டார், இது அவரது இதய நிலையின் காரணமாக அவரது உடல்நலத்தை மேலும் பாதித்துள்ளது.
“அவர் (தனபாலன்) உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போலீசாருக்குத் தெரியும், ஆனால் அவரை இரண்டு நாட்களாக மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்துள்ளனர்,” என்று விஸ்வநாதன் மேற்கோளிட்டுள்ளார்.