சபா, கோத்தா கினாபாலுவில் உள்ள தவுன் குசி இடைநிலைப்பள்ளியில் வகுப்புகளில் கலந்துகொள்ளத் தவறியதாக கூறி, ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு எதிராக மேலும் மூன்று மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
ருசியா சப்தரின், நூர் நதாஷா அல்லிஸ்யா ஹமாலி மற்றும் கால்வினா அங்காயுங் ஆகியோர் ரோக்ஸனா & கோ சட்ட நிறுவனத்தின் மூலம் கடந்த மாதம் கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.
அவர்கள் மூவருக்கும் இப்போது 19 வயது, மார்ச் மற்றும் நவம்பர் 2017-க்கு இடையில், ஆங்கில வகுப்புகளில் கற்பிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி மொஹமட் ஜைனல் ஜம்ரான் என்ற ஆசிரியருக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அக்டோபர் 30, 2018 அன்று, 19 வயதான மாணவர் நஃபிரா சிமான், 2015-ம் ஆண்டில், அதேப் பள்ளியில் ஏழு மாதங்கள், வேண்டுமென்றே வகுப்புகளுக்கு வரவில்லை என்று மொஹமட் ஜைனல் மீது வழக்குத் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் மொஹட் ஜைனல், பள்ளி முதல்வர் சூயிட் ஹனாபி, கல்வி இலாகா தலைமை இயக்குநர், கல்வி அமைச்சர் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகிய ஐந்து பிரதிவாதிகள் பெயரிடப்பட்டனர்.
சில ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் புகார்கள் கொடுத்தும், மொஹமட் ஜைனல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர்களின் வகுப்பிற்கு மாற்று ஆசிரியர்கள் வழங்கப்படவில்லை என்றும் வாதிகள் கூறினர்.
2017-ம் ஆண்டு, அவர்களைத் தேர்வுகளுக்குத் தயாராவதை உறுதி செய்வதில், கல்விச் சட்டம் 1996-இன் கீழ், அந்த ஐந்து பிரதிவாதிகளும் தங்கள் கடமைகளை மீறியதாக நீதிமன்ற அறிவிப்பை மூன்று வாதிகளும் கோரியுள்ளனர்.
மேலும், மத்திய அரசியலமைப்பு சட்டம் 5-வது பிரிவின் கீழ், 12-வது பிரிவைச் சேர்த்து வாசிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, கல்வியைப் பெறுவதற்காக அவர்கள் மூவரின் உரிமைகளையும் இந்த ஐந்து பிரதிவாதிகளும் மீறியுள்ளதாக அறிவிக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.