பினாங்கு துணை முதலமைச்சர் II பி இராமசாமி, சுங்கை மூடா மூல நீர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற கெடாவின் கோரிக்கை, கூட்டாட்சி நிதியைப் பெறுவதற்கான அரசியல் சூழ்ச்சி என்று விவரித்தார்.
நீர் உரிமை விஷயங்களைப் பற்றியும் சுங்கை மூடாவிலிருந்து எடுக்கப்படும் மூல நீர் கட்டணங்களைப் பினாங்கு ஏன் செலுத்த வேண்டியதில்லை என்பது பற்றியும் கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நோருக்கு உண்மையில் தெரியாது என்று இராமசாமி மேலும் கூறினார்.
“நிச்சயமாக – நிச்சயமாக – அவர் மத்திய அரசாங்க நிதியுதவியைப் பெற அரசியல் விளையாட்டை விரும்புகிறார்,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, நீர் விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக சுங்கை மூடாவிலிருந்து பினாங்கு எடுத்த ஒவ்வொரு கன மீட்டர் மூல நீருக்கும், 10 சென் வசூலிக்க கெடா விரும்புவதாக சனுசி கூறியிருந்தார்.
இருப்பினும், ஆற்றில் இருந்து மூல நீரை எடுப்பது மாநிலத்தின் உரிமை என்று பினாங்கு வலியுறுத்தியது.
இருப்பினும், அக்கோரிக்கையைத் தொடர்ந்து, கெடாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநில அரசு தயாராக இருப்பதாகப் பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயூ தெரிவித்தார்.
சுங்கை மூடா மூல நீரை, பினாங்கு அதன் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுப்பதால், தண்ணீருக்கு ஒரு சென்கூட கெடாவுக்குச் செலுத்த மாட்டோம் என்று பினாங்கு அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.
“பினாங்கின் நீர் உரிமைகள் மதிக்கப்படாவிட்டால், கெடா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் அல்லது கலந்துரையாடல்களை நடத்தமாட்டோம்,” என்று இராமசாமி கூறினார்.