பஹாங் நீர் கடனை ஒழித்ததைப் போல, அரசாங்கம் பிடிபிடிஎன் கடனையும் இரத்து செய்ய வேண்டும்

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், பஹாங் நீர்வழங்கல் சேவைத் துறையை மறுசீரமைப்பதற்கும், மாநிலத்தின் நீர்வழங்கல் கடன் RM2.1 பில்லியனை அகற்றுவதற்குமான மத்திய அரசின் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதனைப் போலவே, பி40 பிரிவினருக்குத் தேசிய உயர்க்கல்வி நிதிக் கழகம் (பிடிபிடிஎன்) வழங்கியக் கல்விக் கடனையும் நீக்குமாறு அந்த டிஏபி எம்.பி. மத்திய அரசை வலியுறுத்தினார்.

“பஹாங் மாநிலத்திற்கு, பில்லியன் கணக்கான நீர் வழங்கல் கடனுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும் என்றால், குறிப்பிட்ட பிடிபிடிஎன் கடன் சிக்கலைத் தீர்ப்பதிலும் மத்திய அரசு அதே ஒதுக்கீட்டை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

“எண்ணிக்கையை முற்றிலுமாக நீக்குவது சாத்தியமில்லை, ஆனால் முழுக் கடனில் பாதி அல்லது ஒரு பகுதியை நீக்குவது இந்தக் கடன் வாங்குபவர்களுக்கு நிறைய உதவும்,” என்று கோவிட் -19 தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி லிம் கூறினார்.

“கோவிட் -19 தொற்றுநோய் தவிர்க்க முடியாத பேரழிவு, எனவே மக்களின் பிழைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும், மேலும் ஏழைகளுக்கு உதவ தங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த மாதம், மார்ச் முதல் அக்டோபர் வரையில், 422,609 கல்வி கடன் வாங்கியவர்களிடமிருந்து, RM595.25 மில்லியன் தொகையைப் பிடிபிடிஎன் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் மாத நிலவரப்படி, 1.5 மில்லியன் கடன் வாங்கியவர்களில் மொத்தம் 422,609 பேர் தங்கள் கடன்களை மீண்டும் செலுத்த விருப்பம் தெரிவித்தனர்.