அடக்குமுறை அல்லது சுரண்டல் குறித்து புகாரளிக்க, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குச் சிறப்பு புகார் தளம் ஒன்று அடுத்த மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என மனிதவள அமைச்சர் எம் சரவணன் தெரிவித்தார்.
இது தொழிலாளர்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் இருப்பதை உறுதி செய்ய உதவும் என அவர் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்காத முதலாளிகளைக் கண்டுபிடிப்பது இந்தப் புகார் தளத்தின் நோக்கம் அல்ல, மாறாக, அரசாங்கத்தை நேரடியாக தொழிலாளர்களுடன் இணைப்பதற்கான ஒரு தளமாக இது இருக்கும் என்றார்.
“உள்ளூர் அல்லது வெளிநாட்டினர் எனப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு ஊழியரும் மனிதவள அமைச்சுடன் நேரடித் தொடர்பில் இருப்பதோடு, இதன்வழி அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் தகவல்தொடர்புகளையும் பலப்படுத்த இது உதவும்.
“சுகாதார அமைச்சின் சட்டம் 446 அல்லது கோவிட் -19 தொற்றின் செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு ஏற்ப, முதலாளிகள் பொருத்தமான வசதிகளை வழங்கவில்லை எனில், இந்தப் புகார் தளத்தின் மூலம் ஊழியர்களிடம் இருந்து உடனடி தகவல்களை நாங்கள் பெற முடியும், மேலும் எந்தவொரு முதலாளி அல்லது தனிநபருக்கும் எதிராக தீர்க்கமாக நாங்கள் செயல்படுவோம் என்று அவர் சொன்னார்.
மேலும் கருத்து தெரிவித்த சரவணன், கிள்ளானில், சுல்தான் சுலைமான் தொழிற்பேட்டை பகுதியில், வடக்கு துறைமுகத்தில் ஒரு கையுறை தொழிற்சாலையின் வெளிநாட்டு தொழிலாளர்கள், அரசு அதிகாரிகளால் சோதிக்கப்படுவதையும் விசாரிக்கப்படுவதையும் தவிர்க்க, அருகிலுள்ள ஹோட்டலில் மறைத்து வைத்த சம்பவத்தைப் போன்று முதலாளிகளால் ஏமாற்றப்படுவதைக் கண்டறிய அரசாங்கத்திற்கு இது உதவும் என்றார்.
சட்டம் 446-இன் படி, தொழிற்சாலை தனது ஊழியர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்கத் தவறிவிட்டது; என்பதற்கு வலுவான சான்றுகள் இருந்தபோதிலும், தகவல் கசிவு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, இரவில் ஊழியர்கள் இடம் மாற்றப்பட்டதால், முதலாளி மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார் அவர்.
ஜனவரி 11-ம் தேதி, தனது அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தப் புகார் தளத்தால் இதுபோன்ற கசிவு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
“இதற்குப் பிறகு, அவர்கள் தங்கள் ஊழியர்களை மறைக்கவோ அல்லது கடத்திச் செல்லவோ முடியாது, ஏனெனில் இதன் மூலம், பணியாளர் தங்குமிட நலனில் அனைத்து முதலாளிகளின் தவறான நடத்தைகளும் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படும், நான் முதலாளிக்குப் பாடம் கற்பிக்க விரும்புகிறேன்,” என்ற அவர், ஊழியர்களின் தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்படும் என்றார்.
அந்தப் புகார் தளம் இந்தி, உருது, நேபாள், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்றும் சரவணன் சொன்னார்.
– மலேசியாகெஸட்