`மகாதீருடன் நெருக்கமாக இல்லாவிட்டால், அன்வர் பிரதமராக முடியாது` – ஜாஹித்

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், டாக்டர் மகாதிர் முகமதுவுடன் சமாதானமாகப் போகாவிட்டால் பிரதமராக வேண்டும் என்ற இலக்கை அவர் அடைய முடியாது என்று ஏழாவது பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜாஹித் முஹமட் அரிப் கூறினார்.

“தற்போதைய சூழ்நிலையில், அவருக்கும் மகாதீருக்கும் நல்ல உறவு இல்லை, இருவரும் விலகி இருக்கிறார்கள்.

“அவர் கீழ்ப்படிந்து, டாக்டர் மகாதீருடன் நெருக்கமாகாவிட்டால், அவர் அப்படியே இருக்க வேண்டியதுதான், அவர் பிரதமராக முடியாது,” என்று அவர் நேற்று இரவு மலேசியா போஸ்ட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

 

தனது அரசியல் ஆசைகளையும் பிரதமராக வேண்டும் எனும் தனது இலக்கையும் அடைய, டாக்டர் மகாதீருடன் அன்வர் சமரசம் செய்துகொள்வது என்பது ஒன்றும் கடினமானது அல்ல என்று ஜாஹித் கூறினார்.

செப்டம்பர் 2008 முதல், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக பலமுறை அன்வர் கூறியுள்ளது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

பெர்சத்து உச்சமன்றக் குழுவின் உறுப்பினரான ஜாஹித், “சந்திரனும் சூரியனும் இருக்கும் வரை” அன்வர் தொடர்ந்து தான் போதிய எண்ணிக்கையைக் கொண்டிருப்பதாகக் கூறிக்கொண்டிருப்பார்.

அதுவும், இப்போது தேர்தல் வழியாகப் பிரதமராக வாய்ப்பு கிடைக்காது என்பதை அவர் உணர்துள்ளபோது என்று ஜாஹித் கூறினார்.

இருப்பினும், ஒரு தலைவராக இருக்க, அன்வர் ஒரு ‘நல்ல’ நபர் அல்ல என்று ஜாஹித் நம்புகிறார்.

“உடலில் உயிர் உள்ளவரை, அன்வர் பிரதமராவதைத் தடுக்க நான் முயற்சிப்பேன்,”

ஷெராட்டன் நடவடிக்கைக்குப் பின்னால்…

1998-ல் மகாதீரால் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது அன்வரை ஆதரித்த அம்னோ உறுப்பினர்களில் ஜாஹித்தும் ஒருவர், ஆனால் 2012- இல் அன்வருக்கு எதிராக அவர் மாறினார்.

பி.எச். கூட்டணியில் இருந்து பெர்சத்து வெளியேறி, பி.எச். அரசாங்கத்தைக் கவிழ்த்து, தேசியக் கூட்டணி எனும் குடையின் கீழ் தேசிய முன்னணி, பாஸ், கட்சியை விட்டு வெளியேறிய பல பி.கே.ஆர். உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளுடன் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கிய ஷெரட்டன் இயக்கத்தின் பின்னால் இருந்தவர்களில் ஜாஹித்தும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

“ஷெரட்டன் நடவடிக்கையில் எனது பங்கு பெரியதல்ல, ஒரு சிட்டிகை மட்டுமே,” என்று நேர்காணலில் கேட்டபோது அவர் கூறினார்.

ஜாஹித்தின் கூற்றுப்படி, பெர்சத்து தலைவரான மகாதீரை, தேசியக் கூட்டணியின் பிரதமராக நியமிப்பதற்கான அசல் திட்டம், மகாதீர் அம்னோவுடன் பணிபுரிய மறுத்து, இராஜினாமா செய்ததனால் நிறைவேறாமல் போனது.

மார்ச் 1-ம் தேதி, பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின், நாட்டின் எட்டாவது பிரதமராக முடிசூட்டப்பட்டார்.

இருப்பினும், டாக்டர் மகாதிர் ஜாஹித்தை ஓர் எதிரி என்று விவரித்தார், அவர் எதிர்கொள்ளும் நீதிமன்ற வழக்கு காரணமாக, பெர்சத்துவைப் பி.எச்.-லிருந்து வெளியே கொண்டு வர ஜாஹித் பிரச்சாரம் செய்தார், அந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தைத் தடுத்து வைக்குமாறு ஜாஹித் கேட்டுக் கொண்டார் என்றும் மகாதீர் கூறியிருந்தார்.

தனது சொந்த நலன்களை அடைவதற்காக மலேசிய அரசியலில் மிகப்பெரிய பொய்யர் என்று ஜாஹித்தை மகாதீர் வர்ணித்தார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில், மகாதீர் தனியாக அல்லது கூட்டணியில் இணைந்து களமிறங்குவாரா என்று கேட்டதற்கு, அரசியலில் எதுவும் சாத்தியமாகலாம் என்று அவர் சொன்னார்.

சில எதிர்பாராத ஒத்துழைப்புகள் ஏற்கனவே எப்படி நடந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை அவர் மேற்கோள் காட்டினார்.

மகாதீர் மற்றும் அன்வர் மற்றும் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் சமீபத்தில் மகாதீர் மற்றும் அம்னோ மூத்தத் தலைவர் தெங்கு ரஸலீக் ஹம்சா ஆகியோருக்கு இடையிலான கடைசி ஒத்துழைப்புகளை அவர் விளக்கினார்.

மகாதீர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் தேசியக் கூட்டணி கவனம் செலுத்தும், ஆனால், தனிப்பட்ட முறையில் பெர்சத்துவுடன் மகாதீர் சமரசம் காண வேண்டுமென அவர் விரும்புகிறார் என்ற எண்ணத்தையும் ஜாஹித் வெளியிட்டார்.