எஸ்.ஓ.பி.-யை மீறிய தொழிற்சாலைக்கு RM1,000 தண்டம், பெட்டாலிங் ஜெயா எம்.பி. ஏமாற்றம்

கடந்த வியாழக்கிழமை, நடந்த ஒரு சோதனையில், மலேசிய சுகாதார அமைச்சு  நிர்ணயித்த செந்தர இயங்குதல் நடைமுறையை (எஸ்.ஓ.பி.) மீறியதற்காக கிள்ளானில் உள்ள ஒரு கையுறை தொழிற்சாலைக்கு RM1,000 தண்டம் விதிக்கப்பட்டது தொடர்பில், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா தனது ஆச்சரியத்தையும் கோபத்தையும் தெரிவித்தார்.

“சாதாரண மக்களுக்கு RM8,000 வரை தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு தொழிற்சாலையின் அதிகாரிக்கு RM1,000 மட்டுமே தண்டம் விதித்துள்ளது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதுபோன்ற முதலாளித்துவ நிறுவனங்கள் எஸ்ஓபி-யை மீறுகின்றன, மேலும் அவர்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது என்றார் அவர்.

“மீறுபவர்களுக்கு தண்டம், எஸ்ஓபி-யை அவர்கள் மீண்டும் மீறாமல் இருக்கும்படியானதாக இருக்க வேண்டும், மேலும் இது அதன் தீவிரத்தன்மையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதும் முக்கியம், சட்டத்தின் அடிப்படையில், RM10,000 வரை தண்டம் விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

தொழிலாளர்களுக்கு மிகவும் நியாயமான, உகந்த மற்றும் ஆரோக்கியமான சூழலை மீண்டும் உருவாக்க இப்போது வாய்ப்புள்ளது, இதன்வழி அவர்களின் அமைப்பையும் பலப்படுத்த முடியும் என்றார் மரியா.