ஜொகூர், நெகிரி செம்பிலானில் மூன்று இடங்கள் பி.கே.பி.டி.

கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களிலும், மூன்று இடங்களில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.டி.) அரசாங்கம் இன்று அறிவித்தது.

கோத்த திங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தைச் (ஐபிடி) சார்ந்த, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளைத் தடுத்துவைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறை, ஒரு புனர்வாழ்வு மையம் மற்றும் ஒரு மண்டபம் ஆகியவை இதில் அடங்கும்.

மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், லோட் 19094, தாமான் டேசா செஜாத்தரா, கோத்த திங்கியில் அமைந்துள்ள ‘அரேனா செகிதீகா’ மண்டபம், டிசம்பர் 28 முதல் அடுத்தாண்டு ஜனவரி 10 வரையில் பி.கே.பி.டி. கீழ் இருக்கும்.

அங்குத் திரையிடப்பட்ட 171 கைதிகளில் 125 பேருக்குக் கோவிட் -19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அவர் உறுதிபடுத்தினார்.

ஜொகூரில் பி.கே.பி.டி. விதிக்கப்பட்ட மற்றொரு இடம், பத்து 19, ஜாலான் உலு சோ – பொந்தியானில் மைந்துள்ள ஜொகூர் பாரு புனர்வாழ்வு மையம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு ஆகும். டிசம்பர் 28 முதல் ஜனவரி 10, 2021 வரை இங்கு பி.கே.பி.டி. அமலில் இருக்கும்.

685 கைதிகள் மற்றும் ஊழியர்கள் டிசம்பர் 16 முதல் 23 வரை மற்றொரு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜரானபோது, அங்குப் பதிவு செய்யப்பட்ட 8 நேர்மறை பாதிப்புகளின் காரணத்தால் இது ஏற்பட்டுள்ளது என்று இஸ்மாயில் சொன்னார்.

இதன்வழி, 102 வீடுகளை உள்ளடக்கிய 937 கைதிகள், 322 ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 128 பேர் பி.கே.பி.டி. அடங்குவர்.

நெகிரி செம்பிலானில் உள்ள பி.கே.பி.டி.யைப் பொறுத்தவரை, அங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், ஜெலெபு சிறை மற்றும் ஊழியர்கள் தங்குமிடங்களுக்கு, 2020 டிசம்பர் 10 முதல் 2021 ஜனவரி 10 வரை பி.கே.பி.டி. விதிக்கப்படும் என்று இஸ்மாயில் கூறினார்.

டிசம்பர் 22 நிலவரப்படி, திரையிடப்பட்ட 1086 பேரில் மொத்தம் 307 நேர்மறை நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கைதிகளில் 305 பேரும், வார்டன்கள் சம்பந்தப்பட்ட 2 பாதிப்புகளும் அடங்கும்.