’66 விழுக்காடு மருத்துவர்கள் பகடி வதைக்கு ஆளாகின்றனர், குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும்’

நாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களிடையேப் பகடி வதையின் அறிகுறிகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு பொதுச்சேவை பணியாளர்கள் சங்கம் (கியூபெக்ஸ்) சுகாதார அமைச்சை வலியுறுத்தியது.

மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்.எம்.ஏ.) ஆய்வு அறிக்கையைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இது திறம்படத் தடுக்கப்படுவதை உறுதிசெய்து, வரும் புகார்களைத் தீர்க்க வேண்டும் என்றும் அதன் தலைவர் அட்னான் மாட் கூறினார்.

“கியூபெக்ஸ் எம்.எம்.ஏ.-வின் ஆய்வு அறிக்கையைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது; பணியிடத்தில் பகடி வதைக்கு ஆளாகும் கலாச்சாரத்தை குறிப்பாக, மருத்துவர்கள் போன்று நிபுணத்துவ தொழிற்துறைகளில் இது மிகவும் பொருத்தமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கியூபெக்ஸ் கருதுகிறது.

“பகடி வதையின் அறிகுறிகள் இந்த மருத்துவப் பயிற்சியாளர்களின் உணர்ச்சிகளையும் பணியின் தரத்தையும் பாதிக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அட்னான், பகடி வதையால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், அவர்களின் அடையாளத்தையும் நிலையையும் பாதிக்காத வகையில் அவர்தம் பிரச்சினைகளை வெளிப்படுத்த அனுமதிக்கும் ஒரு தளத்தைச் சுகாதார அமைச்சு வடிவமைத்து வழங்க வேண்டும் என்றார்.

“ஒவ்வொரு ஊழியருக்கும் போதுமான உளவியல் சேவைகளும் வழங்கப்பட வேண்டும், இது அவர்கள் பணியின் தரத்தை மட்டுமல்லாது, அவர்களால் நோயாளிகள் பாதிப்படையாமல் இருக்கவும் உதவும்; தவிர, பகடிவதை கலாச்சாரம் குறித்து மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும்.

நேற்று, எம்.எம்.ஏ. தனது ஆய்வில், நாட்டில் பொதுத்துறையில் பணிபுரியும் 66.9 விழுக்காடு மருத்துவர்கள், பகடி வதைக்கு அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாவதைக் காட்டியது; இதில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் (52.9 விழுக்காடு) என்றும் அது கூறியது.

எம்.எம்.ஏ இந்த ஆய்வினை, 1,800 பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் இளம் வல்லுநர்களிடையே நடத்தியுள்ளது.

  • பெர்னாமா