சுகாதார அமைச்சு இன்று 1,594 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
சிலாங்கூர் இன்று அதிக எண்ணிக்கையிலான (697) பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது புதிய பாதிப்புகளில் 43.7 விழுக்காடு. இதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் 194 நேர்வுகள் (12.2 விழுக்காடு), ஜொகூரில் 191 நேர்வுகள் பதிவாகியுள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 116 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகின்றன, அவர்களில் 53 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று 1,181 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இன்று மூவர் இந்நோய்க்குப் பலியாகினர், இருவர் சிலாங்கூர் சுங்கை பூலோ மருத்துவமனையிலும், ஒருவர் சபா, கோத்தகினபாலு குயின் எலிசபெத் மருத்துவமனையிலும் மரணமடைந்தனர்.
மற்ற மாநிலங்களில் புதியத் தொற்று பதிவுகள் பின்வருமாறு: – நெகிரி செம்பிலான் (160), சபா (157), பினாங்கு (69), பேராக் (47), கிளந்தான் (28), மலாக்கா (14), கெடா (12), பஹாங் (11) , புத்ராஜெயா (9), திரெங்கானு (3), சரவாக் (2).
பெர்லிஸ் மற்றும் லாபுவானில் புதியத் தொற்றுகள் எதுவும் இன்று பதிவாகவில்லை.
இன்று ஐந்து புதியத் திரளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார். அவை பின்வருமாறு :-
- ஜாலான் கடாங் கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மற்றும் செராஸ் மாவட்டங்கள்.
- மெனாரா ஶ்ரீ திரளை – பேராக், கிரியான் & கோலாலம்பூர், லெம்பா பந்தாய், கெப்போங், தித்திவங்சா மற்றும் செராஸ் மாவட்டங்கள்.
- புக்கிட் பாசீர் திரளை – ஜொகூர், மூவார் மாவட்டம்.
- பிந்து கேங் திரளை – கிளந்தான், கோத்த பாரு மாவட்டம்.
- புத்ரா 15 திரளை – புத்ராஜெயா