இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள டிஏபி கட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அவரது தந்தை லிம் கிட் சியாங்கைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான இயக்கம் வேகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 17-ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஒரு புத்தகத்தின் வெளியீடு, கட்சித் தேர்தலுக்கு – ஜூன் 30 – முன்னதாக, ‘லிம் எதிர்ப்பு இயக்க’த்தின் வேகத்தை அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
ஜனவரி 17 நிகழ்ச்சி, ஒரு காலத்தில் தேசிய விளம்பரச் செயலாளராகவும், துணைத் தலைமைச் செயலாளராகவும், கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்த டிஏபி மூத்தத் தலைவர் லீயூ ஆ கிம் எழுதிய இருமொழி கவிதைகள் மற்றும் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பின் மூலம் தொடங்கவுள்ளது.
1938-ல் பிறந்த லீயூ, 1966-ல் டிஏபி-யில் சேர்ந்தார், பின்னர் மூன்று தவணைகள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் கிட் சியாங்கின் நெருங்கிய நண்பராக இருந்தார். இருப்பினும், 1998-ஆம் ஆண்டில், வீ சூ கியோங் மற்றும் ஃபூங் கெட் விங் ஆகியோருடன் இணைந்து அப்போதையப் பொதுச்செயலாளர் கிட் சியாங்கை எதிர்த்தார்.
அப்படியிருந்தும், ‘கிக் அவுட் கிட் சியாங்’ என்று அழைக்கப்படும் இயக்கம் இறுதியில் தோல்வியில் முடிந்தது.
இதன் விளைவாக, வீ கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், அதே நேரத்தில் லீயூ மற்றும் ஃபூங் இராஜினாமா செய்து, மலேசிய ஜனநாயகக் கட்சியை (எம்.டி.பி) உருவாக்கினர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2002-ல், லீயூ மீண்டும் டிஏபியில் சேர்ந்தார்.
82 வயதான லியூ, வரவிருக்கும் சி.இ.சி. தேர்தலில் ஒரு பதவிக்காகப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.
‘முப்பது ஆண்டுகள் அரசியலில்’ என்றத் தலைப்பில், சீன மொழியில் எழுதப்பட்ட அவரது நினைவுக் குறிப்பு, 1998 கட்சி நெருக்கடி தொடர்பான பல சம்பவங்களைத் தொட்டு எழுதப்பட்ட இப்புத்தகம், கிள்ளானில், ஒரு சீன உணவகத்தில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அழைக்கப்பட்ட விருந்தினர்களில், சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதிராவ் மற்றும் முன்னாள் டிஏபி உறுப்பினர் ஹியூ குவான் யாவ் ஆகியோரும் அடங்குவர்.
லியூ மற்றும் கணபதிராவ் இருவரும் மத்தியச் செயற்குழு (சி.இ.சி.) வேட்பாளர்கள், அதே நேரத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராஜினாமா செய்த போதிலும், ஹியூ கட்சியில் ஒரு குறிப்பிட்ட செல்வாக்கைக் கொண்டுள்ளார்.
முன்னதாக, புத்தக வெளியீடு கடந்தாண்டு டிசம்பர் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டது, ஆனால் சில “தவிர்க்க முடியாத காரணங்களால்” தாமதமானது. தொடர்பு கொண்டபோது, ஜனவரி 17-ம் தேதி, இம்முறை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று மலேசியாகினியிடம் லீ கூறினார்.
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும், டிஏபிக்குள் கிட் சியாங்கை அமைதியாக எதிர்க்க ஓர் இயக்கம் உள்ளது என்பதை மலேசியாகினி தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த முறை, இலக்கு மூத்தத் தலைவர் மட்டுமல்ல, அவரது மகன் குவான் எங்’கும் அதில் அடங்குவார்.
டிஏபி அரசியலமைப்பின் படி, குவான் எங் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும், ஏனெனில் அவர் அப்பதவியில் நிர்ணயிக்கப்பட்ட மூன்று தவணைகளை எட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், குவான் எங் பொதுச்செயலாளர் பதவியை நிறைவுசெய்த பின்னர், தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புவார் என்று கட்சியில் ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
தற்போதைய தலைவர் தான் கோக் வாய், சி.இ.சி. தேர்தலில் போட்டியிடுவார் என்றாலும், அந்தப் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ஹியூ தனது முகநூல் பக்கத்தில் சில பதிவுகளைச் செய்தபின்னர்.
‘சூப்பர்மேன்’ என்றும், டிஏபி அடிமட்டத்தினரிடையே ஒரு தீவிரவாதியாகவும் அறியப்படும் ஹியூ, குவான் எங் ஒரு ‘சூத்திரதாரி’ ஆக விரும்புவதாகவும், கட்சித் தலைவராகத் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
‘டிஏபியில் முடிவெடுப்பவர் உண்மையில் யார்? அது பொதுச்செயலாளராக இருக்க வேண்டும், கட்சித் தலைவராக இருக்கக்கூடாது.
“அதனால்தான் கட்சி அரசியலமைப்பு பொதுச்செயலாளரின் பதவி காலத்தை மூன்று தவணைகள் அல்லது ஒன்பது ஆண்டுகளாக வரையறுக்கிறது. அதே நேரத்தில், தலைவர் பதவிக்குக் கால வரம்பு இல்லை,” என்று ஹியூ தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.