லியு : புத்தக வெளியீடு குவான் எங், கிட் சியாங்கை வீழ்த்துவதற்கான விழா அல்ல

சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, டிஏபி மூத்தத் தலைவர், லியூ ஆ கிம்-இன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளதை உறுதிப்படுத்தினார், ஆனால் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ‘லிம் எதிர்ப்பு’ இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

“நான் அவரது புத்தக வெளியீட்டில் கலந்துகொள்வேன் என்று லியூவுக்கு உறுதியளித்துள்ளேன், ஆனால் இந்த விழாவுக்கும் கட்சி தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

“மேலும், லீயூ மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்தபோது, ​​இரு லிம்’களையும் வீழ்த்துவதற்கான இயக்கத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு என்று அவர்கள் என்னிடம் கூறவில்லை,” என்று அவர் நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.

டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அவரது தந்தை லிம் கிட் சியாங்கைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கான இயக்கம் ஒன்று செயல்படுவதாக நேற்று மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

இது டிஏபி உறுப்பினர்களிடையே வேகத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 17-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இப்புத்தக வெளியீடு, கட்சியின் தேர்தலுக்கு முன்னர், அவ்வியக்கத்தை ஆதரிப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

வேறு பணிகள் உள்ளன

துவக்கத்தில், அந்நிகழ்ச்சியில் உரையாற்ற உறுதியளித்ததாக லியு கூறினார், ஆனால் இப்போது, அதை லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துடன் இணைக்கும் ஊகங்களின் காரணமாக, தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாக லியு தெரிவித்தார்.

அவர் பேசுவாரா இல்லையா என்று கேட்டபோது, “நிலைமையைப் பொறுத்து,” என்று கூறினார்.

“இந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்படாவிட்டால் நான் கலந்துகொள்வேன், ஆனால் இரு லிம்’களையும் அகற்றுவதற்கான பிரச்சினை குறித்து நான் எதுவும் கூற மாட்டேன்,” என்று லியு மேலும் கூறினார்.

அவரும் அந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளாரா என்று கேட்டதற்கு, அக்கேள்வி எழவில்லை என்றார் லியு.

இதற்கிடையில், சிலாங்கூர் டிஏபி துணைத் தலைவர் வி கணபதிராவ் மலேசியாகினியிடம் லியூ’வின் புத்தக வெளியீட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்ததாகவும், ஆனால் அதில் கலந்துகொள்ள போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரான அவர், அன்றைய நாளில் வேறு சில பணிகள் இருப்பதால் அவரால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.

டிஏபி தலைமையை எதிர்க்கும் எந்தவொரு இயக்கத்திலும் தாம் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார்.