அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, எழுத்துப்பூர்வக் கடிதம் ஒன்றை வெளியிட்டதை முன்னாள் அம்னோ பொதுச் செயலாளர் அன்வார் மூசா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, தேசியக் கூட்டணி அரசாங்கத்தை (பி.என்.) கவிழ்க்கும் நோக்கம் கொண்ட அந்தக் கடிதம், மாட்சிமைத் தங்கிய மாமன்னருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
“தேசிய முன்னணி அங்கத்துவம் பெற்றுள்ளத் தேசியக் கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த, அன்வர் இப்ராஹிமுக்கு அம்னோ தலைவர் எழுத்துப்பூர்வமாக ஆதரவளித்துள்ளதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
“இந்த அறிவிப்பு மன்னருக்கும் தெரியப்படுத்தப்பட்டது,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு நாள் கழித்து இச்செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அஹ்மத் ஜாஹிட்டின் இந்நடவடிக்கை, ஒரு புதிய அரசியல் சீரமைப்பு உருவாக்கம் என்று அழைக்கப்படும், டிஏபி தொடர்புடைய ஒரு முயற்சியும் ஆலோசனையுமாகும் என்று அன்வார் கூறினார்.
“தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நிலைத்தன்மையை மீண்டும் மீண்டும் ஆட்டங்காணச் செய்வது, இந்த நாட்டில் மலாய் ஒற்றுமையையும் இஸ்லாத்தையும் உருவாக்கிய முக்கியக் கட்சிகளின் உறவை, குறிப்பாக அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
நேற்று, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட செய்தி, மதியம் 1.51 மணிக்குப் புலனம் வழியாக அவருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
சதி செய்ய விரும்பவில்லை
அன்னுவாரின் கருத்துப்படி, கூட்டணியின் தலைவருடன் பரஸ்பர நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவர் தனது கடமைகளைச் சிறப்பாக செய்ய முடியும்.
“இதற்கு முன்னர் இதுபோன்ற சூழ்நிலைகள் இருந்தபோதிலும், சமீபத்தில், எனது கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாட்டையும் உறுதியாகவும் வெளிப்படையாகவும் பாதுகாக்கக் கோரும் பல விஷயங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கொள்கைகள் காரணமாக அது மாறிவிட்டது,” என்று அவர் கூறினார்.
அன்வருக்கான எழுத்துப்பூர்வ ஆதரவு வழங்கியது மட்டுமின்றி இன்னும் சில நடவடிக்கைகளும் அவர் தேசிய முன்னணி தலைமைச் செயலாளராக இருந்தபோது நடந்தது என்றார்.
ஒரு புதிய அரசியல் சீரமைப்பை உருவாக்குவதில் டிஏபி சம்பந்தப்பட்ட முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும், தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் அளவிற்கும், அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து இடையேயான நல்ல உறவை அச்சுறுத்தும் வகையிலும் இருந்தது.
கூடுதலாக, அன்னுவார் பட்டியலிட்ட சிக்கல்கள் :-
- முவஃபாகாட் நேஷனல் கொள்கை விஷயங்களில், தெளிவற்ற தன்மை, குறிப்பாக தேசிய முன்னணி தலைவரின் ஒருமித்த கருத்தின்மை.
- கோவிட் -19 தொற்றுநோய் பரவுதலிலும் கடுமையானப் பொருளாதார அழுத்தங்களினாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அழைப்பு.
கொள்கையில் உள்ள வேறுபாட்டின் காரணமாக, அஹ்மத் ஜாஹித்தின் வழியைப் பின்பற்றாமல் இருப்பது அவருக்கு நல்லது என்று அன்னுவார் கூறினார்.
இனி பி.என். பொதுச்செயலாளராக இல்லாததனால், அவர் தனது சொந்த மனசாட்சிக்கு ஏற்ப செயல்படவும் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவும் அதிக சுதந்திரம் கொண்டவர் என்றார்.
“எனவே, இந்த பணிநீக்கத்தை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் சரணடைகிறேன்.
“அம்னோவின் போராட்டத் தளத்தில் நான் தொடர்ந்து போராடுவேன்,” என்று அவர் கூறினார்.