பாலியல் துன்புறுத்தல் மசோதா இவ்வாண்டு தாக்கல் செய்யப்படும்

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தின் போது எழுப்பப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மசோதா இவ்வாண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரீனா ஹருன் தெரிவித்தார்.

மசோதா தாக்கலைத் தாமதப்படுத்தியதற்குக் கோவிட் -19 தொற்றுநோயும் ஒரு காரணம் என்று ரீனா மேலும் கூறினார்.

“கோவிட் -19 தொற்றுநோயால் மசோதாவின் வரைவு அட்டவணை சற்று பாதிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

“எனவே, மசோதா விளக்கக்காட்சியின் இலக்கு சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இவ்வாண்டு அதைத் தாக்கல் செய்ய முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த மசோதா தொடர்பாக அமைச்சு மற்றும் பிற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகள் மற்றும் அமர்வுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று அவர் விளக்கினார்.

“தற்போதுள்ள சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவது உட்பட, சட்டத்தைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை,” என்று அவர் கூறினார்.

தற்போதையப் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தில், அனுமதியின்றி படங்களை எடுப்பது, தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்தல், அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பது மற்றும் பரப்புவது போன்ற குற்றங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.