சுகாதார அமைச்சு இன்று, 3,027 புதியக் கோவிட் -19 நேர்வுகளையும் 8 மரணங்களையும் பதிவு செய்துள்ளது.
ஜொகூர் (1,103) கிள்ளான் பள்ளத்தாக்கை விட (1,039) அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
ஜொகூரில் புதிய நேர்வுகளில் பெரும்பாலானவை புக்கிட் பாசிர் திரளையைச் (779) சார்ந்தவை, அது மூவார் மாவட்டத்தில் தொடங்கி, கெடா, சிக் மாவட்டம் வரையில் பரவியுள்ளது.
இத்திரளயைப் பற்றி வேறு எதுவும் அறியப்படவில்லை, இது ஒரு பணியிடத் திரளை என்றும், அறிவிக்கப்பட்ட நேரத்தில் (டிசம்பர் 28), அது உள்ளூர்வாசிகளை மட்டுமே உள்ளடக்கியது என்று மட்டுமே தெரிகிறது.
இன்று 2,145 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 63 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று, எண்மர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சுங்கை பூலோ மருத்துவமனையில் மூவர், பினாங்கு மருத்துவமனை, அம்பாங் மருத்துவமனை, சிரம்பான் மருத்துவமனை, செர்டாங் மருத்துவமனை மற்றும் சண்டகான் மருத்துவமனையில் முறையே ஒருவர் என மொத்தம் 8 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆக, இதுவரை இத்தொற்றின் காரணமாக நாட்டில் 521 பேர் மரணமடைந்துள்ளனர்.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
ஜொகூரில் 1,103, சிலாங்கூரில் 706, சபாவில் 493, கோலாலம்பூரில் 316, பினாங்கில் 111, கிளந்தானில் 66, நெகிரி செம்பிலானில் 63, பேராக் 59, கெடாவில் 30, பஹாங்கில் 25, புத்ராஜெயாவில் 17, சரவாக்கில் 14, மலாக்காவில் 11, திரெங்கானுவில் 10, லாபுவானில் 3.
மேலும் இன்று, 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
சிலாங்கூரில் 2 – ஹர்த்தாமாஸ் கட்டுமானத்தளத் திரளை (உலு லங்காட் – 48), டாமாய் பெலாங்கி (தடுப்பு முகாம்) திரளை (உலு சிலாங்கூர் – 21), கோலாலம்பூரில் 4 – ஜாலான் ஈப்போ கட்டுமானத் தளத் திரளை (கெப்போங் – 98), ஜாலான் ஜெயா திரளை (செராஸ் – 7), டேசா செதாப்பாக் திரளை (தித்திவங்சா – 15), ருங்குப் திரளை (கெப்போங் – 20); ஜொகூரில் 1 – சீனாய் முர்னி திரளை (கூலாய் – 66); புத்ராஜெயாவில் 1 – ஸியாரா புத்ரா திரளை (7); சரவாக்கில் 1 – கெராஞ்சி தாபுவான் திரளை (கூச்சிங் – 6).