1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்டின் (1எம்.டி.பி.) இறுதி தணிக்கை அறிக்கையைத் திருத்திய வழக்கில், கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீ ராமை பிரதான வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான நஜிப் ரசாக்கின் விண்ணப்பம் ஜனவரி 27-ம் தேதியன்று விசாரணைக்கு வரும்.
புதிய விசாரணையின் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் இன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதிவாதியின் வழக்கறிஞர் நூர் சியாஹிரா ஹனபியா தெரிவித்தார்.
நீதிபதி முகமது ஜெய்னி மஸ்லான் முன்னிலையில், இன்று காலை நடைபெறவிருந்த விசாரணை, முன்னணி ஆலோசக வழக்குரைஞர் முஹம்மது ஷஃபி அப்துல்லா உடல்நிலை சரியில்லாமல் போனதால் இரத்து செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“ஷஃபி எம்.சி.யில் (நோய்வாய்ப்பட்ட விடுப்பு) இருக்கிறார் இன்று. எனவே, இன்றைய வழக்கு, துணைப் பதிவாளர் கேத்தரின் நிக்கோலஸ் முன்னிலையில் வழக்கு நிர்வாகமாக மாற்றப்பட்டது.
“1எம்.டி.பி. (நஜிப்) தணிக்கை அறிக்கையைத் திருத்துவதற்கான விசாரணையில், ஸ்ரீ ராம் மூத்த டி.பி.பி.-ஆக தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான விண்ணப்பம் ஜனவரி 27, காலை 9.30 மணிக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்,” என்று நூர் சியாஹிரா கூறினார்.