புதிய மெர்சிடிஸ் : விமர்சனத்திற்குள்ளான பினாங்கு முதல்வர்

பினாங்கு முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக, மாநில அரசு  ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியதை அடுத்து, சோவ் கோன் இயூ விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இளைஞர், விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் சையத் சதிக் அப்துப் இரஹ்மான் உட்பட, இரண்டு இளைஞர் தலைவர்கள் இந்தச் செலவினம் தேவையற்றது என்று விவரித்தனர், குறிப்பாக கோவிட் -19 தொற்றின் பொருளாதாரத் தாக்கத்துடன் மக்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்.

“இந்தக் கோவிட் -19 தொற்றுநோயினால் நூறாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ள இந்நேரத்தில், மக்கள் பணத்தைப் பயன்படுத்தி ஒரு சொகுசு கார் வாங்க வேண்டிய அவசியமில்லை; அதேநேரத்தில், தற்போது பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று சையத் சாதிக் நேற்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு, கிளந்தான் மாநில அரசு, மந்திரி பெசார் அஹ்மத் யாகோப்`பிற்காக வாங்கியப் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருடன் இதனை அவர் ஒப்பிட்டார்.

பாஸ் தலைமையிலான, மாநில அரசு மெர்சிடிஸ் எஸ் 450 எல் ஏஎம்ஜி-யை, ‘டிவி 1’ பதிவு எண் தட்டுடன் வாங்கியது, இதன் விலை RM600,000-க்கு மேல் என்று கூறப்படுகிறது.

“நாம் நியாயமாக இருக்க வேண்டும்! புதிய மெர்சிடிஸ் கார் மற்றும் கோவிட் -19 காலகட்டத்திலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் ‘காலாவதியான’ சம்பள உயர்வு என்பதற்காக, கிளந்தான் பாஸ் தலைமை விமர்சிக்கப்பட்டது.

“இதுவும் அதுபோலதான். தயவுசெய்து … இது ஆடம்பரமாக இருக்க வேண்டிய நேரம் அல்ல. மக்கள் மீது முழு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது,” என்று மலேசியா ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் (மூடா) நிறுவனருமான அவர் கூறினார்.

2013-ம் ஆண்டில் வாங்கிய, முந்தைய மெர்சிடிஸ் எஸ் 300 எல்-ஐ மாற்றுவதற்காக டிஏபி தலைமையிலான பினாங்கு மாநில அரசு, சோவுக்கு ஒரு புதிய அதிகாரப்பூர்வக் கார், மெர்சிடிஸ் எஸ் 560-ஐ வழங்கியுள்ளது என்று நேற்று செய்தி வெளியானது.

பினாங்கு மாநிலச் செயலாளரின் அலுவலகத்தை மேற்கோள் காட்டி, புதியக் கார் 2020 டிசம்பர் 31ம்- தேதி, RM127,765.22 தள்ளுபடிக்குப் பிறகு RM458,122.78-ல் வாங்கப்பட்டது என்று பெர்னாமா கூறியது.

திரெங்கானு பி.கே.ஆர். இளைஞர் தலைவர், நஸான் சுல்கிப்ளி இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துமென ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“எதிர்க்கட்சியைத் தாக்க மட்டுமே தெரிந்த ஒரு கட்சியாக இருக்க நாங்கள் விரும்பவில்லை, இறுதியில் நாங்களும் அவர்களைப் போலவே காரியங்களைச் செய்கிறோம்.

“இது ஒரு நண்டு அதன் சந்ததியினருக்கு நேராக நடப்பது எப்படி என்று கற்பிக்க முயற்சிப்பது போலானது,” என்று அவர் கூறினார்.

“பினாங்கு முதலமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று நஸான் மேலும் கூறினார்.

பி.கே.ஆர், மூடா, டிஏபி ஆகிய 3 கட்சிகளும் கூட்டாட்சி மட்டத்தில் எதிர்க்கட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.