‘கோவிட் -19 மேலாண்மை கட்டுப்பாடு மீறிபோனது’ – பிரதமருக்கு மருத்துவ வல்லுனர்களின் திறந்த மடல்

விமர்சனம் | நாட்டில், கோவிட் -19 தொற்றுநோயின் மேலாண்மை ஓர் இருண்ட மற்றும் கட்டுப்பாடற்ற நிலைக்கு வந்துள்ளதைக் கண்டு நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) மற்றும் பிற சுகாதாரத் தலையீடுகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை குறையவே இல்லை.

திரட்டப்பட்ட சம்பவ வீதமும் (100,000 மக்கள் தொகைக்கு) தொற்று வீதமும் (1,000 மக்கள்தொகையில் செயலில் உள்ள பாதிப்புகள்) ஏற்ற இறக்கமில்லாமல், 1,000 பேரில் 0.879 என்ற அளவில் தொற்று விகிதம் உள்ளது.

இதன் பொருள், ஒவ்வொரு 10,000 பேருக்கும் 8 முதல் 9 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேர்மறை கண்டறிதல் சோதனை விகிதம், 2021 ஜனவரி 3-ஆம் தேதி, 8.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது, இது உலகச் சுகாதார அமைப்பால் 5 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்ட தொற்றுநோய்களின் கட்டுப்பாட்டின் செயல்திறனுக்கான அளவுகோலை விட மிக அதிகம்.

மலேசியாவில் கோவிட் -19 தொற்றைத் தவிர்ப்பதற்கு, 10 உடனடி நடவடிக்கை திட்டங்களை நாங்கள் முன்மொழிய அனுமதியுங்கள்.

  1. கோவிட் -19 நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, இலக்கைக் கண்டறிய, பெரிய அளவிலான மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனைக் கருவிகள் (ஆர்.டி.கே-ஏஜி) பி.சி.ஆரை விட எளிதானவை, மலிவானவை, வேகமானவை.
  1. 24 மணி நேரத்திற்குள்ளான, ஆர்.டி.கே-ஏஜி ஆரம்பக் கண்டறிதல், உடனடி தனிமைப்படுத்தலை அனுமதிப்பதோடு, அவர்களின் தொடர்புகளையும் உடனடியாகக் கண்டறிய உதவுகிறது.
  1. டிஜிட்டல் பயன்பாடு, தொடர்புகளைக் கண்டறிந்து கண்காணிப்பு செயல்முறைகளைத் துரிதப்படுத்துகிறது. கூடுதலாக, அறிவியல் தரவுகள் மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரையிடலுக்கான இலக்குப் பகுதிகளை விரைந்து கண்டறிய முடியும். உடனடியான `கண்டுபிடி-ஆய்வுசெய்-அடையாளங்காண்-தனிமைப்படுத்து` (Find-Test-Trace-Isolate -FTTI) வழி மட்டுமே கோவிட் -19 திரளைகளை உடைத்து, அதிவேகமாகப் பரவிவரும் இந்தக் கோறனியின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
  1. இலக்கு வைத்த மற்றும் பாரிய சோதனைத் திட்டத்தினால் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாட்டின் சுகாதாரத் திறனைப் பாதுகாக்க, சுகாதார அமைச்சின் தெளிவான வழிகாட்டுதல்களுடன், நிலை 1 மற்றும் 2 மருத்துவப் பாதிப்புகளின் தனிமைப்படுத்துதலை வீட்டிலேயே ஏற்பாடு செய்யலாம்.டிஜிட்டல் முறையில், உள்ளூர் சமூகத்தினரின் ஆதரவுடனும் உதவியுடனும், தினசரி அடிப்படையில் அவர்களின் சுகாதார நிலையைக் கண்காணிக்கவும், மோசமானப் பாதிப்புகளை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பவும் முடியும்.
  1. இந்நோய்த்தொற்று கண்டிராத நோயாளிகளை, கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்காத அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றுவதன் மூலம், கோவிட் -19 மருத்துவமனைகளில் உள்ள மருத்துவப் பணியாளர்களின் சேவை தரத்தை நாம் பாதுகாக்க முடியும். மேலும், கோவிட் -19 நோயாளிகள் மீது தீவிரமான மற்றும் தடையற்ற கவனத்தைச் செலுத்த இது அனுமதிக்கும்.
  1. 3C-களைக் – நெரிசலான இடம், வரையறுக்கப்பட்ட இடம், நெருக்கமான உரையாடல் – குறைக்கும் திறன் கொண்ட, பொதுச் சுகாதாரத் திட்டங்களுடன் நாட்டின் பொருளாதார ஒருமைப்பாட்டிற்கு அவசியமான தொழில்களுக்கு ஆதரவை வழங்குதல். தொற்றுத் தளங்களில் பரவலைத் தடுப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறியும் (POIS – Preventing and early detection of Outbreaks at Ignition Sites) முன்முயற்சி என்பது அரசு, தனியார் துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பாகும்; இது ஆரம்பகால கண்டறிதல், பொதுச் சுகாதார மேம்பாடு மற்றும் தொழில்துறை முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் சுகாதாரக் கல்வியை வலியுறுத்துகிறது. தொழில்துறை மற்றும் WHO-உடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட POIS முன்முயற்சிகள், பல்வேறு இடங்களில், பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்கான கருவியாகப் பயன்படுத்தப்படலாம். இது முழு அரசாங்கத்தையும் (whole-of government) சமூகத்தின் முழு அணுகுமுறையையும் (whole-of-society) உள்ளடக்கியது.
  1. சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்கள் போன்ற கோவிட் -19 தொற்றுநோய் சட்டெனப் பரவும் பிற இடங்களிலும் இத்தகைய முயற்சிகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
  1. தடுப்பூசியின் முதல் டோஸ் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், நோய்த்தடுப்பு ஒழுங்குமுறை செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும். கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி குறித்த தவறான செய்திகள் பற்றி முன்கூட்டியே விளக்கமளித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; இதன்வழி, கோவிட் -19 தடுப்பூசி வரும்போது மக்கள் அதனை ஏற்றுகொள்ளத் தயாராக இருப்பார்கள். தடுப்பூசிகள் வழங்கப்படும் முன்னுரிமை, அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு மட்டுமின்றி, தொற்று நோய் பாதிப்புக்கு அதிகம் இலக்காகியுள்ள தொழில்துறை சார்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் சமூகத்தினர் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தனியார் கிளினிக்குகளில் தடுப்பூசி போடுவோருக்கு, ஒரு டோஸுக்கு RM100-ஐ தாண்டாமல், தடுப்பூசிகளின் விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும், மேலும் ஆர்.டி.கே-ஏஜி பரிசோதனைகள் ஒவ்வொன்றும் RM100-ஐ தாண்டக்கூடாது; தடுப்பூசிகள் மற்றும் பரிசோதனைகளின் விலையை மக்களால் ஏற்றுகொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; கோவிட் -19 இன் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பாக இருக்க, நாட்டில் தடுப்பூசி மற்றும் பரிசோதனைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும்.
  1. நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்க, மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பல்வேறு தொடர்புடைய துறைகளைக் கொண்ட, ஒரு சிறப்பு கோவிட் -19 பணிக்குழு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்; கோவிட் -19 தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் கருத்துகளை ஒருங்கிணைக்க வேண்டும். கோவிட் -19 சிறப்புப் பணிக்குழு, அமைச்சரவையில் தொடர்ந்து பரிந்துரைகள் மற்றும் தணிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் நாட்டை தொற்றுநோயிலிருந்து வெளியேற்றும், மக்களின் வாழ்க்கை, உடல், உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய கூறுகளை இது வலியுறுத்துகிறது. கோவிட் -19 சிறப்பு பணிக்குழுவின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த, மலேசிய மருத்துவச் சங்கம், மலேசிய மருத்துவ அகாடமி, மலேசியப் பொதுச் சுகாதார வல்லுனர்கள் சங்கம் மற்றும் மலேசியத் தனியார் மருத்துவமனை சுகாதார வல்லுனர்கள் சங்கம் ஆகியவற்றை உறுப்பினர்கள் தேர்வில் ஈடுபடுத்த வேண்டும்.
  1. இந்தத் தொற்றுநோயை அரசியலாக்காதீர்கள், அதற்குப் பதிலாக இருதரப்பு கட்சிகளின் ஒருமித்த கருத்தையும், தொற்றைக் குறைப்பதற்கான அணுகுமுறையையும் தேடுங்கள், கொரோனா வைரஸுடன் இணைந்து வாழ்வதற்காக சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதற்குச் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்துங்கள்.

கட்டுப்பாடற்ற தொற்றுநோயின் போது, 15-வது பொதுத் தேர்தலை நடத்துவது, சபா மாநிலத் தேர்தலில் நடந்ததைப் போன்ற பேரழிவைத் தரும்.

இது ஓர் அடிப்படையான பொதுச் சுகாதார நிர்வாகமுறையாகும், தொற்றுநோயின் எதிர்பாராத விளைவுகளைக் குறைக்கவும், மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், நமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மாண்புமிகு பிரதமர் இவற்றை உடனடியாகப் பரிசீலித்து, தீவிரக் கவனம் செலுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம்.


நாட்டின் தலைசிறந்த / முக்கியப் பொறுப்புகளில் உள்ள 46 மருத்துவ வல்லுனர்களின் ஆதரவோடு, பிரதமர் முஹிட்டின் யாசினுக்கு எழுதப்பட்ட ஒரு திறந்த மடல்.