கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்.) திட்டத்தை நிறுத்துவதற்கான இழப்பீட்டு கோரிக்கையைச் சிங்கப்பூரிலிருந்து அடுத்த சில வாரங்களில் மலேசியா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், உரிமைகோரலின் அளவை இரு நாடுகளும் உறுதிப்படுத்தி, ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மைஹெச்எஸ்ஆர் கார்ப்பரேஷன் சென். பெர். தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் நூர் இஸ்மால் முகமது கமல் தெரிவித்தார்.
“தற்போது சிங்கப்பூர் அதன் கோரிக்கையைச் சமர்ப்பிக்க நாங்கள் காத்திருக்கிறோம். அது சமர்ப்பிக்கப்பட்டதும், உரிமைகோரல் நியாயமானதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சிப்போம்,” என்று அவர் நேற்று ஓர் ஊடகச் சந்திப்பில் கூறினார்.
இவ்வாரத் தொடக்கத்தில், பிரதமர் இலாகா (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தபா முகமது, எச்.எஸ்.ஆர் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை 270 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை விட (சுமார் RM820.76 மில்லியன்) குறைவானது என்பது மலேசியாவின் கருத்து என்று கூறினார்.
இந்த இழப்பீடு அபராதம் அல்ல, மாறாக செலவிடப்பட்ட திட்டத்திற்கான தொகையைச் சிங்கப்பூருக்குத் திருப்பிச் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று மொஹமட் நூர் இஸ்மால் மீண்டும் வலியுறுத்தினார்.
“கே.எல்.-சிங்கப்பூர் எச்.எஸ்.ஆர். திட்டத்தை மாற்றியமைத்து, சொந்தமாக செயல்படுத்தப்படக்கூடிய எந்தவொரு திட்டத்திலும் நமக்கு முழுமையான ஆய்வு தேவை,” என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வு விரைவில் தொடங்கப்படும் என்றும், ஆறு மாதங்களுக்குள் அது முடிவடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மலேசியாவும் சிங்கப்பூரும் எச்.எஸ்.ஆர். போன்ற மற்றொரு திட்டத்தில் இணைவதற்கான சாத்தியம் குறித்து கேட்டதற்கு, மைஹெச்எஸ்ஆர் கார்ப்பரேஷன் தலைவர், ஈசா முகமது, எச்.எஸ்.ஆர். இணைப்பை மேம்படுத்துவதற்கான விருப்பங்களை மலேசியா தொடர்ந்து கவனிக்கும், சிங்கப்பூர் எதிர்காலத்தில் எச்.எஸ்.ஆரில் மீண்டும் இணைவது உட்பட என்றார்.
“தற்போதைய திட்டங்கள் முடிவடைகின்றன. எனவே, எதிர்காலத்தில் ஏதேனும் திட்டம் இருந்தால், அது ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும்,” என்றார் ஈசா.
- பெர்னாமா