பொதுத் தேர்தலை (ஜி.இ) கூடிய விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தை உயர் படிப்பு படித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்று அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் விவரித்தார்.
தேங்காய் துருவும் தொழிலாளி ஒருவர், கோவிட் 19-ன் காரணமாகத் தற்போது ஜி.இ. தேவையில்லை என்று கூறியதன் தொடர்பில் கருத்துரைத்த மஸ்லான், ஜி.இ. உடனடியாக நடத்தப்பட வேண்டியக் காரணங்களை விளக்கினார்.
ஆஸ்ட்ரோ அவானி அல்லது டிவி 3-ல் ஒளிபரப்பட்ட அந்த நேர்காணலில், சம்பந்தப்பட்ட அவர் வாக்குப் பதிவு செய்தவரா, இல்லையா என்பதுகூட தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் மஸ்லான் கூறினார்.
“ஆனால், ஜி.இ. அவசியம் என்று நான் கூறுகிறேன், ஏனென்றால் பல நாடுகள் இதைச் செய்துள்ளன, அவற்றில் அமெரிக்கா, சிங்கப்பூரும் அடங்கும், அதுமட்டுமின்றி, நம் நாட்டில் சினி, ஸ்லிம் இடைத்தேர்தல்களையும் சபா மாநிலத் தேர்தலையும் முன்னதாக நாம் நடத்தியுள்ளோம்.
“சபாவில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்ததற்கு, தீவில் உள்ள மக்கள் தங்கள் மோட்டார் படகுகளில் திரையிடல்கள் செய்துகொள்ளாமல் பயணம் செய்ததே காரணம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது, அதனால்தான் அது சுற்றியுள்ள தீவுகளுக்கும் பரவியது.
“நமக்கு ஜி.இ. தேவை, ஏனெனில் இந்த அரசாங்கம் உலகின் மிக மெல்லிய பெரும்பான்மை கொண்ட ஓர் அரசாங்கமாகும். 222 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன, நீங்கள் ஓர் அரசாங்கமாக இருக்க விரும்பினால் 111 + 1 இருக்கைகள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும், அதையே இப்போது மலேசிய அரசாங்கமும் கொண்டுள்ளது.
“அந்தத் தேங்காய் துருவும் நபர் இதை உணரவில்லை போலும், அடிமட்ட மக்களின் குரல் (மக்கள்) என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி எடுத்துள்ளனர், ஆனால் அந்நபர் உயர்நிலைப் பள்ளி வரை மட்டுமே படித்திருப்பார் போலும்.
“அவர் யுஐஏ (யுனிவர்சிட்டி இஸ்லாம் மலேசியா) அல்லது பிஎச்டி (முனைவர் பட்டம்) பெற்றிருந்தால், அவரால் இன்னும் துல்லியமாகக் கருத்து தெரிவித்திருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
நேற்றிரவு, அம்னோ முகநூல் பக்க இயங்கலையில் பேராக் அம்னோ தகவல் பிரிவுடன் அம்னோ தஞ்சோங் மாலிம் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் அஹ்மத் இவ்வாறு கூறினார்.
ஜனவரி 6-ம் தேதி, சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் கோவிட் -19 தொற்றின் தற்போதைய நிலைமை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதால், இலக்கு வைத்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துமாறு பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.