பி.என். துணைத் தலைவர்களாக, சபா கட்சி தலைவர்கள் இருவர் நியமனம்

பிரதமர் முஹைடின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (பி.என்) சபா தலைவர்கள் இருவரை, பார்ட்டி சோலிடரிட்டி தனா ஆயேர்கு (ஸ்டார்) கட்சியிலிருந்து ஜெஃப்ரி கிட்டிங்கானையும், சபா முற்போக்கு கட்சி (எஸ்ஏபிபி) தலைவர் யோங் டெக் லீ’யையும் கூட்டணியின் துணைத் தலைவராக நியமித்துள்ளது.

பெரித்தா ஹரியான் செய்தியின்படி, அவ்விரண்டு சபா அரசியல் கட்சித் தலைவர்களும் அஹ்மத் பைசல் அஸுமு மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோருடன் கூட்டணியின் துணைத் தலைவராக இணைவார்கள்.

ஸ்டார் தலைமைச் செயலாளர் குவாண்டி கோஹோய் மற்றும் எஸ்ஏபிபி-இன் துணைத் தலைவர் எட்வர்ட் டாகுல் இருவரும் பிஎன் உச்சமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

சபா பி.என்-க்குத் தலைமை தாங்கும் சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர், இந்த நியமனம் குறித்து முஹைதீனுக்கு நன்றி தெரிவித்தார்.

“இந்த நியமனம் மாநில மட்டத்தில், கட்சியின் அமைப்பையும் பணியையும் அடிமட்டத்தில் பலப்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

முஹைதீனின் அரசாங்கமான பி.என். கூட்டணி, தேசிய முன்னணி, ஜி.ஆர்.எஸ் மற்றும் சரவாக் கூட்டணி கட்சி ஆகியவற்றைக் கொண்ட ஓர் அதிகாரப்பூர்வமற்ற கூட்டணியாகும்.