கோவிட் -19 பரவுவலைத் தடுக்க, இவ்வாண்டு சிலாங்கூரில் ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூச நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று சிலாங்கூர் இஸ்லாம் அல்லாத மத விவகாரக் குழுவின் இணைத் தலைவர் வி கணபதிராவ் தெரிவித்தார்.
திருவிழாவையும், பொங்கலையும் குறிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஆண்டு கொண்டாட்டங்களும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மாநிலத்தில் உள்ள இந்தியச் சமூகத்திற்கு உதவும் வகையிலானத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றார்.
இந்த ஆண்டு எந்த தைப்பூச ஊர்வலத்திலும் இணைய வேண்டாம் என்றும் அவர் இந்து பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க, பொதுமக்கள், குறிப்பாக இந்து பக்தர்கள் பெரிய அளவில் கூடிவதையோ, நெரிசலான இடங்களுக்குச் செல்வதையோத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
இரட்டைத் தேர் ஊர்வலம் நிறுத்தப்பட்டது
இதற்கிடையே, பினாங்கில் தைப்பூசத்தின் போது முருகன் சிலை தாங்கிய புகழ்பெற்ற இரட்டைத் தேர் ஊர்வலம், இந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.
கோவிட் -19 காரணமாக, ஜனவரி 28-ம் தேதி வீட்டிலேயே இருக்குமாறு பினாங்குத் துணை முதல்வர் II, பி இராமசாமி பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாநிலத்தில் கோவிட் -19 பாதிப்புகள் ஆபத்தான விகிதத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஐந்து மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், பினாங்கின் புகழ்பெற்ற வருடாந்திர தைப்பூச விழாக்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்று அவர் மேலும் கூறினார்.
“இது ஒரு தீவிரமான சூழ்நிலை, மேலும் தொற்றுநோயை மேலும் பரவாமல் தடுக்க நாம் பொறுப்பேற்க வேண்டும். எனவே, நாங்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதோடு, சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.
“ஜனவரி 27-29 தேதிகளில், வீட்டிலேயேப் பிரார்த்தனை செய்ய நாங்கள் இந்துக்களுக்கு அறிவுறுத்துகிறோம். தைப்பூசம் கோவிட் -19 திரளையை நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வெள்ளி மற்றும் தங்க இரதங்களின் ஊர்வலங்கள், பால் குடங்கள், கவாடிகளை எடுத்துச் செல்லுதல், தேங்காய்கள் உடைத்தல் மற்றும் தலைமுடி இறக்குதல் உள்ளிட்ட மூன்று நாள் பண்டிகை நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்படுவதாகப் பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவருமான பி இராமசாமி கூறினார்.
- பெர்னாமா