நூர் ஹிஷாம் : 9 நாட்களில் 71 இழப்புகள், நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்

இந்த ஆண்டு முதல், மோசமடைந்து வரும் கோவிட் -19 தொற்றுநோயின் அளவு கவலையளிப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.

இன்று காலை தனது கீச்சகத்தில், “2020 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இறப்பு எண்ணிக்கை 100-க்கும் குறைவு. ஆனால், இந்த ஆண்டு ஒன்பது நாட்களில், 71 கோவிட் -19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளோம்,” என்று கூறினார்.

“இந்த வளர்ச்சி மிகவும் கவலையளிக்கிறது, கடவுள் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்,” என்று அவர் கூறினார்.

இறந்தவர்களை அடக்கம் செய்யும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் (பிபிஇ) முழுமையான உடையணிந்த ஒரு சுகாதார ஊழியரின் படமும் அந்தக் கீச்சகத்துடன் இருந்தது.

“கோவிட் -19 நோயாளிகளின் சடலங்களை நிர்வகிப்பது, சுகாதார ஊழியர்களுக்கு எளிதான காரியம் அல்ல. அவர்கள் முழுமையான பிபிஇ அணிய வேண்டும், கடுமையான வெப்பத்திலும் வியர்வையிலும் குளிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சமீபத்திய வாரங்களில், கோவிட் -19 இன் புதிய வழக்குகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன.

ஜனவரி 6-ல், சுகாதார அமைப்பை “முறிவு நிலை” (breaking point) என்று விவரித்த நூர் ஹிஷாம், தற்போதுள்ள வசதிகளில், நோயாளிகளின் எண்ணிக்கையை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

அடுத்த நாளில் (ஜனவரி 7), 3,027 புதிய பாதிப்புகள் பதிவாகின, இதுவரையிலான அதிகப் புதிய பாதிப்புகள். ஜனவரி 8-ஆம் தேதி, 16 இறப்புகள் பதிவாகின, ஆக அதிக தினசரி எண்ணிக்கை இதுவாகும்.

நேற்றைய நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 133,559 கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, 26,185 நேர்வுகள் செயல் முனைவில் உள்ளன. இறப்பு எண்ணிக்கை 542 ஆகும்.

ஜனவரி 8-ம் தேதி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன், 2022 நடுப்பகுதியில் மலேசியா, குழு நோய் எதிர்ப்பு சக்தியை (group immunity) இலக்காகக் கொண்டுள்ளது என்றார்.

​​பிப்ரவரி முதல் 18 மாதங்களுக்குள், 70 முதல் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட, மலேசியா இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

உலகளவில், 90 மில்லியன் கோவிட் -19 நேர்வுகளுடன், குறைந்தது 1.93 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.