புதிய கார் வாங்கியதற்காக, பினாங்கு முதல்வர் மன்னிப்பு கோரினார்

கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால், நாடு கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், புதியதாக மெர்சிடிஸ் S560e அதிகாரப்பூர்வக் கார் வாங்கியதற்காக பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ், இன்று பினாங்கு மாநில மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

RM458,000 மதிப்புள்ள, 2019 மாடல் காரை வாங்கியதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்டதாகவும், குறிப்பாக வாங்கியது தொடர்பான கருத்தாய்வுகளைச் செய்வதில் அவரது தரப்பு மிகவும் கவனமாக இருக்கும் என்றும் சோ கூறினார்.

பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான அவர், இது தனக்கும் மாநில அரசிற்கும் ஒரு படிப்பினை என்று கூறினார், ஏனெனில் அதிகாரப்பூர்வக் காரை மாற்ற வேண்டிய அவசியம் இருந்தபோதிலும், இந்த கொள்முதல் மக்கள் துன்பத்தில் இருக்கும் இந்த நேரம் சரியானது அல்ல என்று கூறினார்.

“முதலமைச்சரின் பயன்பாட்டிற்கான கார் முறையான நிர்வாக செயல்முறையின்படி வாங்கப்பட்டது, இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் நான் கவனத்தில் கொள்கிறேன், இது எனக்கும் மாநில அரசுக்கும் ஒரு படிப்பினை என்பதை ஒப்புக்கொள்கிறேன், இந்நடவடிக்கை மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.

“யாராவது புண்பட்டிருந்தால், தொற்றுநோய் காரணமாக இது சரியான நேரம் இல்லை என்று நினைத்தால், அதை ஒத்திவைக்க முடியும், இந்தப் பிரச்சினையில் ஒரு முதலமைச்சர் என்ற முறையில் இறுதி பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று அவர் இன்று ஜார்ஜ்டவுனில் கூறினார்.

நூறாயிரக்கணக்கான மதிப்புள்ள காரை வாங்க, மாநில அரசு மக்களின் பணத்தைப் பயன்படுத்தியது என்ற சில தரப்பினரின் கவலைகள் தொட்டு, ஊடகங்கள் எழுப்பியக் கேள்விகளுக்குப் பதிலளித்த சோ, இந்த விஷயம் உண்மையல்ல, ஏனெனில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) மீண்டும் செயல்படுத்தப்பட்டால், அதனைச் சமாளிக்க பினாங்கு மாநில அரசு தயாராக உள்ளது என்றார்.

-பெர்னாமா