மஇகாவின் முன்னாள் உயர்த் தலைவர்கள் சிலர், ‘மலேசிய உருமாற்றத் தொண்டு அமைப்பு’ (அரிமா) என்ற புதியத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) ஒன்றை உருவாக்கியுள்ள்னர்.
மலேசியாகினியிடம் பேசிய அதன் தலைவர் பி தியாகராஜன், அத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த ஆண்டு, நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது என்றும், குறிப்பாக மஇகாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களால், இந்தியச் சமூகத்திற்குச் சேவை செய்வதற்கான ஒரு தளமாக இது இருக்கும் என்றும் கூறினார்.
இருப்பினும், அத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் மஇகாவுக்கு மாற்று அல்ல என்றும் அவர் கூறினார்.
“இல்லை. இது மஇகாவுக்கு மாற்று அல்ல. மஇகாவை, இந்தியச் சமூகத்தின் பிரதானக் கட்சியாக நாங்கள் மதிக்கிறோம்.
“கட்சியில் ஓரங்கட்டப்பட்ட தலைவர்களுக்கு ஒரு தளத்தை அமைப்பதே எங்கள் குறிக்கோள்,” என்று அவர் கூறினார்.
‘அரிமா’வுடன் இணைந்த தலைவர்களில், மக்களவையின் முன்னாள் சபாநாயகர் வி சுப்பிரமணியம், முன்னாள் துணை அமைச்சர் எஸ் சோதிநாதன், மஇகாவின் முன்னாள் பொதுச்செயலாளர்களான எஸ் முருகேசன் மற்றும் ஏ பிரகாஷ் ராவ் மற்றும் மலாக்கா மாநில முன்னாள் துணைத் தலைவர் கே பசில் ஆகியோர் அடங்குவர்.
“எங்கள் கொள்கை எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இல்லை.
“இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் தரப்பினருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
மேலும் கூறுகையில், அடுத்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்ற அவர், “ஆனால், அரசியலில் ஈடுபட விரும்புவோருக்கு நாங்கள் ஒரு தளமாக இருப்போம்,” என்றார்.