கோவிட் 19 : இன்று 2,433 புதிய நேர்வுகள், 9 மரணங்கள், கிளந்தானில் 3 இலக்கம்

நாட்டில் இன்று, 2,433 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 9 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இது மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 135,992 ஆகவும், செயல் முனைவில் 27,332 பாதிப்புகளைக் கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக, நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

730 நேர்வுகளுடன் சிலாங்கூர் முன்னணியில் உள்ளது, சபாவில் 403 நேர்வுகளும் ஜொகூரில் 321 நேர்வுகளும் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கிளந்தானில் முதல் முறையாக, புதிய நேர்வுகள் மூன்று இலக்கங்களில் (103) பதிவாகியுள்ளன.

மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- கோலாலம்பூர் (231), பினாங்கு (189), நெகிரி செம்பிலான் (144), பேராக் (80), கெடா (71), பஹாங் (41), மலாக்கா (35), திரெங்கானு (29 ), சரவாக் (24), லாபுவான் (17), புத்ராஜெயா (10), பெர்லிஸ் (5).

இன்று 1,277 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 76 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று, சிலாங்கூரில் ஐவர், கோலாலம்பூரில் மூவர் மற்றும் சபாவில் ஒருவர் என மொத்தம் ஒன்பது நோயாளிகள் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஆக, இதுவரை நாட்டில் 551 பேர் இந்நோயின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

மேலும் இன்று, 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

சிலாங்கூரில் 2 – சைபர் கட்டுமானத்தளத் திரளை (உலு லங்காட், செப்பாங், கிள்ளான் & பெட்டாலிங் – 67), டெக்ஸ்மைல் திரளை (கோம்பாக் – 19); கிளந்தான் 2 – அலோர் டுரியான் திரளை (தும்பாட் & கோத்தா பாரு – 17) & வாக்காஃப் லானாஸ் திரளை (பாசீர் பூத்தே – 11); சபா 1 – ஜாலான் சிபுகா திரளை (சண்டகான் – 9).