முஸ்தாபாவை அடுத்து, ரீனா ஹருனுக்கும் கோவிட்-19 தொற்று

மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹருனுக்குக் கோவிட் -19 தொற்று கண்டுள்ளதாக அவ்வமைச்சு இன்று அறிவித்துள்ளது.

“நேற்று இரவு பெறப்பட்ட கோவிட் -19 திரையிடல் பரிசோதனையின் முடிவுகள், அமைச்சருக்குத் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன,” என்று அமைச்சின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிரதமர் இலாகாவின் (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தபா முகமதுவுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு அத்தொற்று கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கடந்த புதன்கிழமை, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அமைச்சர்களும் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்துமாறு கூறப்பட்டனர்.

முஸ்தபாவின் நெருங்கிய தொடர்புகள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 10 அமைச்சரவை உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிடப்பட்டதாகப் புத்ராஜெயா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் விரைந்து பரிசோதனைக்குச் செல்ல வேண்டியக் காரணத்தால், அவர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்ட பல நிகழ்ச்சிகள் கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டன.

இன்னும் பலர் இன்று காலை சோதனைகளைச் செய்துள்ளனர் அல்லது இனி செய்வார்கள். இவர்களில் மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப்; அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன்; மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் நோரைய்னி அகமது ஆகியோரும் அடங்குவர்.

கோவிட் -19 தொற்றுக்குப் பல அமைச்சரவை உறுப்பினர்கள் நேர்மறையானவர்கள் என்று மலேசியாகினிக்குத் தகவல் கிடைத்துள்ளது.