புதிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளை (பி.கே.பி.) கையாளும் அரசாங்கத்தின் முறையைப் பல எம்.பி.க்கள் விமர்சித்தனர்.
பி.கே.பி. நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், செந்தர இயங்குதல் நடைமுறை (எஸ்ஓபி) விவரங்கள் நாளை பிற்பகல் அறிவிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
3 கட்டங்களிலான பி.கே.பி., ஜனவரி 13 நள்ளிரவில் நடைமுறைக்கு வந்து ஜனவரி 26 அன்று முடிவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நாளை மாலை 5 மணிக்கு, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அமலாக்கம் காணவுள்ள எஸ்ஓபி-க்களை அறிவிப்பதாக இஸ்மாயில் கூறினார்.
நேற்று பிற்பகல் ஆறு மணிக்கு, பிரதமர் முஹைதீன் யாசின் பி.கே.பி.யை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், அரசாங்கம் விவரங்களை வழங்கும் என்று தான் எதிர்பார்த்ததாக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் கூறினார்.
வணிகத்துறைகள் தங்களைத் தயார்படுத்திகொள்ள அதிக நேரம் இருக்காது என்றும் அவர் கூறினார்.
பி.கே.பி.யை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டதாகக் கூறிய கூலாய் எம்.பி. தியோ நீ சிங், ஆனால், அதனைக் கடைசி நிமிடத்தில் வெளியிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
“ஜனவரி 13-ஆம் தேதி நள்ளிரவில் பி.கே.பி. நடைமுறைக்கு வரும். அது தொடர்பான எஸ்ஓபியை அறிவிக்க ஜனவரி 12, மாலை 5 மணி வரை ஏன் காத்திருக்க வேண்டும்?
“அரசாங்கம் எப்போதுமே கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறுவது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
லெம்பா பந்தாய் எம்.பி. பாஹ்மி ஃபட்ஸிலும் இதனையே கூறினார், அரசாங்கம் இந்த விஷயத்தை ஒத்திவைக்கக்கூடாது என்றார் அவர்.
“சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு (மிட்டி), இன்றிரவே ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். அவர்கள் காத்திருக்க முடியாது,” என்று அவர் தனது முகநூலில் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, இரவே ஓர் அறிக்கையை வெளியிட்டது, மற்றவற்றுடன், பிரதான தேர்வுக்கு அமரவிருக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கான சிறப்பு அனுமதி கடிதத்தைப் பள்ளி வழங்கும் என்று அது கூறியது.
மற்ற மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இயங்கலையில் கற்பித்தல், கற்றலைத் (பி.டி.பி.ஆர்.) தொடருவார்கள் என்று கல்வியமைச்சு தெரிவித்தது.
இருப்பினும், இதனை எழுதும் நேரத்தில், மிட்டி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பொது எஸ்.ஓ.பி.க்களைக் கையாளும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் நிலையும் இதேதான்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், கடந்த வெள்ளிக்கிழமை முதல் பி.கே.பி. மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற ஊகத்தைத் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.
“மிட்டியிடமிருந்து மேலதிக விளக்கம் இல்லாமல், முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் மீண்டும் பி.கே.பி-க்குத் தயாராக போதுமான நேரம் வழங்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
பி.கே.பி. வணிகங்களையும் தொழிலாளர்களையும் தொடர்ந்து பாதிக்கும் என்று கூறிய அவர், RM500 மில்லியன் மதிப்பிலான உதவிப் பொதியை அறிவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.