மலேசியத் தமிழர் தேசியப் பேரவை, தை (சுறவம்) மாதம் முதலாம் நாள் பிறக்கும் திருவள்ளுவராண்டு 2052-ஆம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினை அனைத்து மலேசிய வாழ் தமிழர்களுக்கும் உவகையோடு தெரிவித்துக் கொள்கிறது.
தை துவக்கத்தைச் சீர்மிகு செந்தமிழர் புத்தாண்டாக வரவேற்பதை நமது இலக்கியங்களும் அறிஞர்களின் ஆய்வுகளும் ஐயம் தெளிய உறுதிபடுத்துகின்றன.
தமிழர் தாயகத்தைத் தாண்டி, தமிழர் புத்தாண்டில் பொங்கலிடும் வழக்கம் மலேசியாவில் ஏறத்தாழ அரசு விழாவுக்கு ஒப்ப பெருஞ்சிறப்பாக தொடர்ந்து கொண்டாடப்படுவதை ஒவ்வொரு ஆண்டும் பார்க்கின்றோம்.
நம் மலேசியத் திருநாட்டின் அரசாங்கம், பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குச் சிறப்பு முன்னுரிமை வழங்கி, நாட்டின் முதன்மர் (பிரதமர்) தொடங்கி பல்வேறு இனத்தினர் இணைந்து கொண்டாடும் பழக்கம் இந்நாட்டின் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வலுபடுத்துகின்றது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாண்டில் கோறணி நச்சில் பரவலால் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகிய இந்தச் சூழலில் புது நம்பிக்கையை ஏந்தி பாதுகாப்போடு தமிழர்கள் பொங்கலிட்டுப் புத்தாண்டை வரவேற்கும் முறையைத் தொடர வேண்டும்.
பல்வேறு சமயம், மதம், கொள்கை போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்த தமிழர் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் தமிழ்ப்புத்தாண்டைச், சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கலிடுவதுதான் சீர்மிகு செந்தமிழரின் வழமை.
எனவே, இவ்வாண்டு தை முதல் நாள் அன்று (14.01.2021) காலை மணி 7.23-க்கு (மலேசிய நேரப்படி) கதிரவன் இருள் அகற்றி கதிர்களைப் பாய்ச்சும் வேளையில் பொங்கலிடவது மிகச்சிறப்பானது.
தமிழ்மைக்கு ஏற்றவாறு தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட சில வழிக்காட்டல்களை முன்வைக்கின்றோம். அவை:-
- இல்லத்தைத் துப்புறவு செய்து மாவிலை, தென்னங்குருத்து, கரும்பு முதலியவை கொண்டு அழகுப்படுத்துதல்;
- வாழ்த்துச் செய்தி/அட்டை பரிமாறுதல்;
- குடும்பப் பெரியவர்களிடம் வாழ்த்துப் பெறுதல்;
- புதியத் தமிழ் நாள்காட்டியைக் குடும்பத்தவர் யாவரும் ஒருங்கே இருந்து மூத்தவர் கையில் தந்து வீட்டுக் கூடத்தில் கண்டிப்பாக மாட்டுதல்;
குடும்பத்தாருடன் இவ்வாண்டு பொங்கல் தமிழ்ப்புத்தாண்டைப் பாதுகாப்புடன் கொண்டாடுமாறு மலேசியத் தமிழர்களை மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கேட்டுக்கொள்கிறது.