‘நான் பால்மரம் சீவும் தொழிலாளியின் மகன், மக்களை இகழ்வது என் இயல்பல்ல’ – மஸ்லான்

தனது முந்தைய அறிக்கையால் வருத்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் முன்வந்தார். மற்றவர்களை அவமானப்படுத்த விரும்பும் நபர் தான் அல்ல என்றும் அவர் கூறினார்.

உயர் படித்த குழுவினருக்குப் பொதுத் தேர்தலை (ஜி.இ.) விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று விவரித்த தனது முந்தைய அறிக்கையைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.

“ஆம், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

“மற்றவர்களை இழிவுபடுத்துவது எனது பழக்கம் அல்ல, அதாவது இது வேண்டுமென்றே நடந்ததல்ல,” என்று அவர் இன்று முகநூல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தான் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, பால்மரம் சீவும் தொழிலாளியின் மகன் என்றும் அஹ்மத் மேலும் கூறினார்.

“மக்களை அவமதிப்பது என் இயல்பு அல்ல,” என்று அவர் கூறினார்.

தேங்காய் துருவி பிழைப்பு  நடத்தும் ஒருவருக்கு, ஜி.இ.யை விரைந்து நடத்த வேண்டியதன் அவசியம் புரியாது; அதிகம் படித்தவர்களுக்குதான் (பி.எச்.டி. பட்டம் பெற்றவர்கள்) அது புரியும் என்று அவர் முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதனை, டிஏபி பொதுச்செயலாளர் அஹ்மட்டின் அறிக்கை திமிர்தனமானது என்றும், சாதாரண தொழிலாளர்களை அவமதிக்கும் நோக்குடையது என்றும் விமர்சித்தார்.

அதே சமயம், அஹ்மத் தனது நிலைப்பாட்டைக் காக்க முன்வந்தார், வெள்ளம் தணிந்ததும், கோவிட் -19 தடுப்பூசி, நாட்டில் மக்களுக்குத் தொடங்கப்பட்டதும் ஜி.இ. யை வைத்துகொள்ளலாம் என்றே தான் கூறியதாக அவர் தனது கீச்சகத்தில் தெரிவித்தார்.

மேலும், ஜி.இ.யைக் கடுமையான, செந்தர இயங்குதல் நடைமுறைகளுடன் (எஸ்.ஓ.பி.) நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டதாகவும் அஹ்மத் கூறினார்.

“நீங்கள் கடைகள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்களில் ஒவ்வொரு நாளும் வரிசையில் நிற்க முடிகிறது என்றால், ஏன் ஒரு நாள் கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் வாக்களிக்க வரிசையில் நிற்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.