‘அவசரகாலப் பிரகடனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது , மக்களின் உரிமைகளை மீறியதல்ல’ – ஸ்ரீ ராம்

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான அவசரகால அறிவிப்பு மக்களின் மனித உரிமைகளை மீறவில்லை என்றும், இந்த அமலாக்கம் அரசியலமைப்புச் சட்டமாகும் என்றும் முன்னாள் மத்திய நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் தெரிவித்தார்.

இருப்பினும், அடிப்படை சுதந்திரங்களை மீறினால், அவசரகாலத்தில் அறிவிக்கப்பட்ட சட்டங்களை நீதிமன்றத்தில் சவால் செய்யலாம் என்றார் அவர்.

“அடிப்படை உரிமைகள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு கொள்கை கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், அச்சட்டங்களைச் சவால் செய்ய முடியும்,” என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

அவசரகால அறிவிப்புக்கான காரணம் மத்திய அரசியலமைப்பின் 150-வது பிரிவில் உள்ளது என்று ஸ்ரீ ராம் கூறினார்.

பிரிவு 150 (1), நாட்டில் பாதுகாப்பு அல்லது பொருளாதார வாழ்க்கை அல்லது பொது ஒழுங்கு அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளது என்று பேரரசர் நினைத்தால், அவசரகாலச் சட்டத்தை அவர் அறிவிக்கலாம்.

கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு செயலூக்க நடவடிக்கையாக 2021 ஆகஸ்ட் 1-ம் தேதி வரை, அவசரக்காலப் பிரகடனத்திற்கு மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரிவு 150-ன் படி, அரசியலமைப்பில் அவசரகால அமலாக்கம் இருந்தபோதிலும், இந்த அறிவிப்பு மோசமான எண்ணத்துடன் செய்யப்பட்டது என்பதற்கு வலுவான சான்றுகள் இருந்தால், இந்த உத்தரவைச் சவால் செய்யலாம் என்று ஸ்ரீ ராம் கூறினார்.

“அவசரகாலத்தை மீட்டுக்கொள்ள, மன்னருக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென அமைச்சரவையைக் கேட்டுகொள்ள நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எந்தவொரு நிருவாக நடவடிக்கையையும், சட்டம் மற்றும் அரசியலமைப்பு அடிப்படையில் சவால் செய்யப்படலாம்.

“மற்றொரு காரணம், இந்த அறிவிப்பு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் அல்லது முறையற்ற நோக்கங்களுக்காக செய்யப்பட்டது என சவால் விடலாம். ஆனால், அதனை உறுதியான ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 1-ம் தேதிக்குப் பிறகும், அவசரகால அமலாக்கத்தை நீட்டிக்க மன்னருக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஸ்ரீ ராம் வலியுறுத்தினார்.

“150 (8) (பி) (ii) பிரிவு, அவசரகாலப் பிரகடனத்தின் நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பேரரசருக்கு உள்ளது என்றும், அவரது முடிவின் செல்லுபடியை எந்த நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது,” என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா