நாடு முழுவதும் அவசரநிலை மேலாண்மை சீராக இயங்குவதை உறுதிசெய்ய, அவசரநிலை மேலாண்மை தொழில்நுட்பக் குழுவை அமைக்க அரசாங்கம் இன்று ஒப்புக் கொண்டது என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார்.
இந்தக் குழுவிற்குப் பிரதமர் துறை இலாகாவின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுதீன் ஹசானும் அரசாங்கத்தின் தலைமை செயலாளர் மொஹமட் ஜுகி அலியும் இணைந்து தலைமை தாங்குவார்கள் என்று முஹைதீன் கூறினார்.
இன்று, தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (என்.எஸ்.சி.) அவசர அமர்விக்குத் தலைமை தாங்கிய அவர், மாநில முதல்வர்களுடனும் முதலமைச்சர்களுடனும் நடந்த இயங்கலை கூட்டத்தில் , இந்தக் குழுவை நிறுவுவது முடிவு செய்யப்பட்டது என்றார்.
“அவசரநிலைகள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்கும் தீர்வுகளை பரிந்துரைப்பதற்கும் இது உதவும்,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்தக் குழுவில், பொதுச் சேவை துறையின் தலைமை இயக்குநர், கருவூலப் பொதுச்செயலாளர், சட்டத்துறை தலைவர், ஆயுதப்படையின் தலைமைத் தளபதி, காவல்துறை தலைவர், சுகாதாரத் தலைமை இயக்குநர், தேசியப் பாதுகாப்பு மன்றத் தலைமை இயக்குநர் மற்றும் கிளஸ்டர்-தலைவர் ஆகியோர் அடங்கிய எட்டு நிரந்தர உறுப்பினர்களும் அடங்குவர் என்று பிரதமர் கூறினார்.
- பெர்னாமா