கடந்த வியாழக்கிழமை, முகக் கவரி தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, கட்டாயத் தொழிலாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும், 38 ரோஹிங்கியா குழந்தைகளைக் காவல்துறையினர் மீட்டனர்.
நேற்றைய சினார் ஹரியான் செய்தியின்படி, ஜனவரி 14-ம் தேதி இரவு, சிலாங்கூர், செலாயாங்கில் இரண்டு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (ஜே.எஸ்.ஜே), தனிநபர்கள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்பு (அட்டிப்சம்) பிரிவின், தலைமை உதவி இயக்குநர், மூத்த உதவி ஆணையர் ஃபடில் மார்சஸ், இந்தச் சோதனையில் 3 பெண்கள் உட்பட, 6 உள்நாட்டினரைப் போலிஸ் கைது செய்தது என்றார்.
“இந்த நடவடிக்கையின் வழி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 38 குழந்தைகளைக் காவல்துறை மீட்டது, கட்டாய உழைப்புக்காகக் கடத்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள் உட்பட,” என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.
அனைத்து குழந்தைகளுக்கும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (யு.என்.எச்.சி.ஆர்.) அட்டை இருப்பதாக ஃபாடில் கூறினார்.
ஆரம்ப விசாரணையில் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கியதாகவும், ஒரு நாளைக்கு RM45 சம்பளம் வழங்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டது என்ற அவர், “இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை,” என்றார்.
அந்நிறுவனம், மனிதவளத் துறையில் பதிவு செய்யாமல், வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கைதான அனைவரும், கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்பு (அட்டிப்சம்) 2007, பிரிவு 12 மற்றும் பிரிவு 14-இன் கீழ் விசாரிக்க, 7 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.