கடிதம் | நாட்டில் நாளுக்கு நாள், கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் வேளையில், அதற்கான தீர்வு என்ன, பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்னா, எவ்வளவு விரைவில் தடுப்பூசி கிடைக்கும் என நாடே கவலைகொண்டிருக்கும் வேளையில், ஆங்காங்கே பாலியல் பலாத்காரச் சம்பவங்களும் நடந்தே வருகின்றது.
2021, ஜனவரி 8-ம் தேதி, சரவாக், மிரி காவல் நிலையத்தின் பூட்டப்பட்டச் சிறைக்கட்டறையில் (lock up), ஒரு சூதாட்ட சோதனையின் போது, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நமது பயத்தை அதிகரித்துள்ளது.
ஜனவரி 9-ம் தேதி, அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், காவலில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு கைதியால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
டிஏபி செனட்டர் ஆலென் லிங் முனைப்பு காட்டியுள்ள இந்த வழக்கில்; சரவாக் காவல்துறை ஆணையர் எடி இஸ்மாயில் இந்த வல்லுறவு சம்பவம் குறித்து காவல்துறை ஆழ்ந்த விசாரணை நடத்தும் என்று உறுதியளித்துள்ளார்.
குற்றம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த இரு போலீஸ்காரர்களையும் இடைநீக்கம் செய்வதும் இதில் அடங்கும்.
காவல் நிலையத்தின் பூட்டப்பட்டச் சிறைக்கட்டறையில், ஒரு குழந்தைக்குப் பாதுகாப்பில்லை என்பது முதல் மற்றும் முக்கியமான, திகிலூட்டும் ஒரு செய்தியாகும். மேலும், குழந்தைகளைத் தடுத்து வைக்கும் போது, செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) திடீர் சோதனை நடத்திய குழு அறிந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக, பாலியல் பலாத்காரம் செய்தவர் எவ்வாறு பாதிக்கப்பட்டவரை அணுகவும், கட்டாயப்படுத்தவும் முடிந்தது? ஒரு கைதி அவரது அறையில் காணவில்லை என்பதைக் கடமையில் இருந்த அதிகாரி கவனிக்கவில்லையா? அந்த நேரத்தில் அவர்கள் எந்தவொரு சத்தத்தையும் செவிமடுக்கவில்லையா?
காவல்நிலையச் சிறைக்கட்டறைகளில் மறைக்காணிகள் (சி.சி.டி.வி.) பொருத்தப்படும் எனப் பல காவல்துறை ஆய்வாளர்களும் உள்துறை அமைச்சர்களும் உறுதியளித்ததைப் போல அனைத்து சிறைக்கட்டறைகளிலும் மறைக்காணிகள் பொருத்தப்பட்டிருந்தனவா?
மேலும், புக்கிட் அமானும் சரவாக் மாநிலக் காவல் துறையினரும், தங்கள் சொந்த ஆட்களின் கண்காணிப்பிலேயே முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எவ்வாறு சுயாதீனமாக விசாரிக்கப் போகிறார்கள்?
ஒரு தொற்றுநோய் பரவலின்போது ஏற்படக்கூடிய மிகப் பெரிய திகில் என்னவென்றால், மனித உரிமைகள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள், ஊனமுற்றோர், சிறுபான்மையினர் மற்றும் வயதானவர்களுக்கு நம்பமுடியாத வகையில் மீறப்படும் உரிமைகள் ஆகும்.
கோவிட் -19 தொற்று, அரசியல் அவசரநிலை, மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகள், பள்ளி, வேலைவாய்ப்பு, சில மாநிலங்களில் திடீர் வெள்ளம் மற்றும் RM35 மில்லியன் பெரும் தொகை ஒதுக்கீட்டில் ஜொகூர், பாகோவில் பிரதமர் முஹைதீன் யாசினின் நாடாளுமன்றத் தொகுதியில் மூன்று மண்டபங்கள் உள்ளிட்டப் பல பிரச்சனைகளில், இது போன்ற வல்லுறவு வழக்குகள் விரைவாக உள்வாங்கப்பட்டு, மெதுவாக மங்கிப்போகும்.
அவ்வாறு நிகழ்ந்தால், இது அடையாளம் காணப்படாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கண்டிக்கப்படாமலும் தண்டிக்கப்படாமலும் போனால், இது மீண்டும் மீண்டும் நடக்கும்.
2021 தொடங்கிய ஒன்பது நாட்களில் நடந்த இந்தக் கோரச் சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும்; மேலும், சுயாதீனப் போலிஸ் நடத்தை ஆணையம் (ஐபிசிசி) இருப்பது எவ்வளவு முக்கியமானது என்ற விவாதம் மீண்டும் மக்களவையில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, விவாதித்து, சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அவசரகால அறிவிப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்தெறிந்துவிட்டது, இந்த ஆண்டு மக்களவைக் கூட்ட அமர்வுகள் இரண்டும் (மார்ச் மற்றும் ஜூலை) நடக்காது. இந்த அரசாங்கம் மக்களுக்குத் தேவையானதைச் செய்வதில் அக்கறை காட்டவில்லை என்பது இதன்வழி தெளிவாகிறது.
பலவீனமான தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் படுகுழியில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். எல்லாவற்றிற்கும் மேலாக, 16 வயது சிறுமியின் வாழ்க்கை சிதைந்துள்ளது.
பிரதமர், உள்துறையமைச்சர், தேசியக் காவல்துறை தலைவர் மற்றும் சரவாக் காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு, இந்தச் சம்பவம் குறித்து நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒரு குழந்தையின், 16 வயது சிறுமியின் பாதுகாவலர்களாக இருக்கவேண்டிய நீங்களே, அவள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக காரணமாகியுள்ளீர்கள், அவள் உயிரைப் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள்!
_________________________________________________________________________
கஸ்தூரி பட்டு, பத்து கவான் எம்.பி. & டிஏபி பெண்களுக்கான சர்வதேசச் செயலாளர்