பி.எச். : அவசரக்காலக் குழுவில் சேர முடிவு செய்வதற்கு முன், தெளிவான விவரங்கள் தேவை

அவசரகால அறிவிப்பு குறித்து, மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்படவுள்ள இருதரப்பு கட்சிகள் சார்ந்த குழுவின் விதிமுறைகளை ஆய்வு செய்ய பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) விரும்புகிறது.

“நாங்கள் முதலில் அதன் விவரங்களைத் தெளிவாக அறிய  விரும்புகிறோம். குறிப்பு விதிமுறைகளையும் எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். குறிப்பு விதிமுறைகளை நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று அமனா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தகவல்களைப் பெற முயற்சிப்பதாக சலாவுதீன் கூறினார்.

விவரங்கள் கிடைத்ததும் எதிர்க்கட்சி கூட்டம் நடத்தும் என்றார் அவர்.

“நாங்கள் அதுவரைக் காத்திருப்போம்,” என்று அவர் கூறினார்.

அக்குழுவில் இணைவதால், அவசரகால அறிவிப்பை எதிர்க்கும் தங்கள் கொள்கைக்கு அது எதிராகப் போய்விடுமோ என்று எதிர்க்கட்சி இப்போது குழப்பத்தில் உள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவ அவசரகால அறிவிப்பு தேவை என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார்.

இருப்பினும், மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்ததனால், ஆட்சியில் நீடிப்பதற்கான முஹைதீனின் உத்தி அவசரநிலை என்று பி.எச். குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனவரி 11 முதல் ஆகஸ்ட் 1 வரையில், அவசரகாலம் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில் மக்களவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.